நெல்லை, தூத்துக்குடியில் 3-வது நாளாக லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்: ரூ.50 கோடி தீப்பெட்டி- உப்பு தேக்கம்


நெல்லை, தூத்துக்குடியில் 3-வது நாளாக லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்: ரூ.50 கோடி தீப்பெட்டி- உப்பு தேக்கம்
x
தினத்தந்தி 23 July 2018 4:30 AM IST (Updated: 23 July 2018 3:07 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை, தூத்துக்குடியில் நேற்று 3-வது நாளாக லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் ரூ.50 கோடி மதிப்பிலான தீப்பெட்டி பண்டல்கள் மற்றும் உப்பு மூட்டைகள் தேக்கம் அடைந்து உள்ளன.

நெல்லை, 

நெல்லை, தூத்துக்குடியில் நேற்று 3-வது நாளாக லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் ரூ.50 கோடி மதிப்பிலான தீப்பெட்டி பண்டல்கள் மற்றும் உப்பு மூட்டைகள் தேக்கம் அடைந்து உள்ளன.

வேலைநிறுத்தம்

இந்தியா முழுவதும் லாரி உரிமையாளர்கள் கடந்த 20-ந்தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், காப்பீட்டு தொகை உயர்வு, சுங்கச்சாவடி கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும், பழைய சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும், பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்தை மத்திய அரசே கையில் எடுத்து, 3 மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே விலை மாற்றத்தை அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்து வருகிறது. நேற்று 3-வது நாளாக போராட்டம் நீடித்தது.

நெல்லை மாவட்டத்தில் நேற்றும் 5,200 லாரிகள் ஓடவில்லை. நெல்லை டவுன் நயினார்குளம் ரோடு, தாழையூத்து, கங்கைகொண்டான், பாளையங்கோட்டை மார்க்கெட், கே.டி.சி. நகர் உள்ளிட்ட பகுதிகளில் லாரிகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. நீண்ட தூரம் இயக்கப்பட்ட லாரிகள் நெடுஞ்சாலை ஓரங்களில் தொடர்ந்து 3 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இதனால் டிரைவர் மற்றும் கிளனர் லாரியிலேயே அடுப்பை வைத்து சமையல் செய்து சாப்பிட்டனர். தொடர் வேலை நிறுத்தத்தால் உள்ளூர் லாரி டிரைவர், கிளனர்கள் வேலைவாய்ப்பு இன்றி பாதிக்கப்பட்டு உள்ளனர். சுமை தூக்கும் தொழிலாளர்களும் பாதிப்படைந்து உள்ளனர்.

காய்கறிகள் தேங்கின

3-வது நாளாக லாரிகள் ஓடாததால் காய்கறிகள் மற்றும் வணிகப்பொருட்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு எளிதாக கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நெல்லை டவுன் நயினார்குளம் மொத்த காய்கறிகள் மார்க்கெட்டில் பல்லாரி, உருளைக்கிழங்கு போன்ற காய்கறிகள் மூட்டை, மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டு உள்ளன.

நேற்று முன்தினம் இரவு நயினார்குளம் மார்க்கெட்டுக்கு நெல்லை மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்து வழக்கத்தைவிட குறைந்த அளவே காய்கறிகள் வந்துள்ளன. அவையும் வெளியூருக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் டவுன் மார்க்கெட், பாளையங்கோட்டை மார்க்கெட்டுகளில் காய்கறிகளின் விலை கணிசமாக உயர்ந்தது.

உப்பு தேக்கம்

தூத்துக்குடி மாவட்டத்திலும் நேற்று 3-வது நாளாக லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் நீடித்தது. தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் இருந்து வெளியூர்களுக்கு கொண்டு செல்லப்படும் சரக்கு போக்குவரத்து முற்றிலும் முடங்கி உள்ளது. அதே நேரத்தில் உள்ளூரில் உள்ள நிறுவனங்களுக்கு சில லாரிகளில் சரக்குகள் ஏற்றிச் செல்லப்படுகின்றன. மேலும் பெரும்பாலான சரக்கு பெட்டகங்கள் துறைமுகத்தில் தேங்கி உள்ளன.

தூத்துக்குடியில் உள்ள உப்பளங்களில் உற்பத்தியான உப்பு பாக்கெட்டுகளிலும், மூட்டைகளிலும் சேகரிக்கப்பட்டு விற்பனைக்கு கொண்டு செல்லப்படாமல் தேங்கி உள்ளன. எப்போதும் போக்குவரத்து நெரிசலுடன் காணப்படும் மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை வெறிச்சோடி காணப்படுகிறது.

ரூ.50 கோடி தீப்பெட்டி பண்டல்கள்

தமிழ்நாட்டில் 200-க்கும் மேற்பட்ட பகுதி எந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, கழுகுமலை, கயத்தாறு, நெல்லை மாவட்டத்தில் சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் தொழிற்சாலைகள் உள்ளன. தமிழ்நாடு முழுவதும் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலைகளில் இருந்து நாள் ஒன்றுக்கு 2 லட்சம் தீப்பெட்டி பண்டல்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதன் மதிப்பு சுமார் ரூ.6 கோடி ஆகும். இங்கு உற்பத்தி செய்யப்படுகின்ற தீப்பெட்டி பண்டல்களில் 80 சதவீதம் வடமாநிலங்களுக்கு லாரிகள் மூலமாகவும், வெளிநாடுகளுக்கு கப்பல்கள் மூலமாகவும் அனுப்பப்பட்டு வருகிறது.

கடந்த மாதம் முதல் வடமாநிலங்களில் தொடர் மழை மற்றும் வெள்ளம் காரணமாக தீப்பெட்டி பண்டல்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ள தொழிற்சாலைகளில் தேக்கி வைக்கப்பட்டு உள்ளன. இதனால் தற்போது தொழிற்சாலைகளில் வாரம் 4 நாட்களே வேலை நடக்கிறது. இந்த நிலையில் லாரிகள் ஸ்டிரைக் தொடர்ந்து வருவதால் மேலும் சிரமம் ஏற்பட்டு உள்ளது. இந்த லாரி ஸ்டிரைக் மேலும் ஒரு வாரம் தொடர்ந்தால் தீப்பெட்டி தொழிற்சாலைகள் மூடப்படக்கூடிய வாய்ப்பு உள்ளது. அப்படி மூடப்பட்டால் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். தமிழகம் முழுவதும் இதுவரை சுமார் ரூ.50 கோடி மதிப்புள்ள தீப்பெட்டி பண்டல்கள் தேங்கி உள்ளன. எனவே இந்த ஸ்டிரைக் மேலும் தொடராமல் இருக்க மத்திய மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்திட வேண்டும் என்று கோவில்பட்டி நேசனல் சிறிய தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க செயலாளர் சேதுரத்தினம் தெரிவித்து உள்ளார்.

லாரிகள் வேலை நிறுத்தத்தால் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பல கோடி ரூபாய்க்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது. காய்கறிகள் மட்டுமல்லாமல் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள், பர்னிச்சர்கள் உள்ளிட்ட பொருட்கள் மொத்தமாக கொண்டு செல்ல முடியாமல் தேக்கம் அடைந்துள்ளன. எனவே லாரிகள் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், வியாபாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story