அரசியல் அறிவை பெண்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்: கடலூரில் நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் கூட்டத்தில் ஸ்ரீபிரியா பேச்சு


அரசியல் அறிவை பெண்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்: கடலூரில் நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் கூட்டத்தில் ஸ்ரீபிரியா பேச்சு
x
தினத்தந்தி 23 July 2018 4:15 AM IST (Updated: 23 July 2018 3:20 AM IST)
t-max-icont-min-icon

அரசியல் அறிவை பெண்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று கடலூரில் நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் ஸ்ரீபிரியா பேசினார்.

கடலூர், 

மக்கள் நீதி மய்யம் கடலூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மற்றும் கடலூர் மாவட்ட புதிய நிர்வாகிகள் அறிமுக விழா கடலூர் டவுன்ஹாலில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு வடக்கு மாவட்ட நிர்வாகி டி.வெங்கடேசன் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட நிர்வாகி ஏ.எம்.கே.ரபீக் வரவேற்றார். மத்திய மாவட்ட நிர்வாகி டி.கே.மூர்த்தி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் நடிகை ஸ்ரீபிரியா, சவுரிராஜன், சி.கே.குமரவேல், மவுரியா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில் நடிகையும், மாநில செயற்குழு உறுப்பினருமான ஸ்ரீபிரியா பேசியதாவது:-

நடிகர்களுக்கு என்ன தெரியும் என்கிறார்கள். கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரும் நடிகர்களாக இருந்து தான் ஆட்சிக்கு வந்தார்கள். ஆகவே நடிகர்கள் அரசியலுக்கு வருவது தவறில்லை.

மக்களுக்கு சேவை செய்வதற்காக தான் கமல்ஹாசன் அரசியலுக்கு வந்திருக்கிறார். மாதம் 1 ரூபாய் சம்பளம் என்று நாட்டை கொள்ளையடிக்க மாட்டோம். உண்மையான அரசியல்வாதியாக கமல்ஹாசன் இருப்பார். தமிழ்நாட்டில், ஏன் இந்தியாவில் உள்ள மக்களுக்கு மறதி அதிகம் உள்ளது. கொள்ளையடித்தவரை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற செய்து இருக்கிறார்கள். பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் அரசியல் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். அப்போது தான் சிந்தித்து செயல்பட முடியும். மாற்றம் தேவை, அது யார்? என்பதை சிந்தித்து, நம்மவருக்கு (கமல்ஹாசன்) வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு ஸ்ரீபிரியா கூறினார்.

அதன்பிறகு ஸ்ரீபிரியா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், பெண்களுக்கு, குறிப்பாக சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறை அதிகரித்து உள்ளது பற்றி கேட்கிறீர்கள். இந்த ஆட்சி அதிகாரம் சரியில்லாததால் தான் இது போன்ற சம்பவங்கள் நடக்கிறது. பள்ளிக்கூடங்களில் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதை விட, ஆண்களுக்கு எப்படி பெண்களை மதிக்க வேண்டும் என்று கற்றுக்கொடுக்க வேண்டும்.

தமிழகத்தில் போதை பொருட்கள் அதிகரித்து விட்டதாக குற்றச்சாட்டு எழுகிறது. சமீபத்தில் குட்கா ஊழலில் யாருக்கெல்லாம் தொடர்பு இருந்தது என்பதை நீங்கள் அறிந்து இருப்பீர்கள். மாற்றம் தேவை. அந்த மாற்றத்தை கமல்ஹாசன் தருவார் என்றார்.

முன்னதாக புதிய நிர்வாகிகளான டி.வெங்கடேசன், ஏ.எம்.கே.ரபீக், டி.கே.மூர்த்தி, எஸ்.சரவணன் ஆகியோரை மாநில செயற்குழு உறுப்பினர்கள் அறிமுகம் செய்து வைத்தனர்.

கூட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியை பலப்படுத்துவது, பெண்களை அதிக அளவில் கட்சியில் சேர்ப்பது, படித்த இளைஞர்கள், மகளிரணியை வைத்து உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது, வாரத்தில் ஒரு நாள் சுகாதார பணிகளை மேற்கொள்வது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் கடலூர் மாவட்ட சட்டமன்ற தொகுதியில் இருந்து ஒன்றிய, நகர, வார்டு, மகளிரணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் கிழக்கு மாவட்ட நிர்வாகி எஸ்.சரவணன் நன்றி கூறினார்.

Next Story