வேலூர் அருகே சிவலிங்கம், துர்க்கையம்மன் சிலைகள் கண்டெடுப்பு


வேலூர் அருகே சிவலிங்கம், துர்க்கையம்மன் சிலைகள் கண்டெடுப்பு
x
தினத்தந்தி 23 July 2018 4:52 AM IST (Updated: 23 July 2018 4:52 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் அருகே விநாயகர் சிலை வைக்க பள்ளம் தோண்டியபோது சிவலிங்கம் மற்றும் துர்க்கையம்மன் சிலைகள் கிடைத்தது.

வேலூர்,

வேலூரை அடுத்த மூஞ்சூர்பட்டு கிராமத்தில் உள்ள ஒரு பிரிவை சேர்ந்த பொதுமக்கள் குறி கேட்டுள்ளனர். அப்போது மூஞ்சூர்பட்டு கிராமத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தை கூறி அந்த இடத்தில் விநாயகர் சிலை வைத்து வழிபடுமாறு குறி சொன்னவர் கூறியிருக்கிறார். அதன்படி பொதுமக்கள் குறிப்பிட்ட அந்த இடத்தை சுத்தம்செய்து பள்ளம்தோண்டும் பணியில் நேற்று ஈடுபட்டனர்.

சுமார் 2½ அடி பள்ளம் தோண்டியநிலையில் சிலைகள் இருப்பதுபோன்று தெரிந்தது. இதனால் உற்சாகமடைந்த பொதுமக்கள் மீண்டும் தோண்டினர். அப்போது அந்த இடத்தில் 2 கற்சிலைகள் இருந்தது. அதனை பொதுமக்கள் மீட்டனர்.

இதுகுறித்து தாசில்தாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து தாசில்தார் பாலாஜி, வேலூர் அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சரவணன், வருவாய் ஆய்வாளர் சுகுமாறன், கிராமநிர்வாக அலுவலர் பிச்சை ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

அப்போது மீட்கப்பட்ட சிலைகளில் ஒன்று கல்லால் ஆன 3 அடி உயரமுள்ள சிவலிங்கம் மற்றொன்று துர்க்கையம்மன் சிலை என்பது தெரிந்தது. துர்க்கையம்மன் சிலை சங்கு, சக்கரத்துடன், கால்கள் உடைந்த நிலையில் இருந்தது.

இதனை பார்வையிட்ட அதிகாரிகள் சிவலிங்கம் சிலை கிடைத்திருப்பதால் அந்த இடத்தில் நந்தி சிலை இருப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகவும், அதனால் தொடர்ந்து தோண்டுமாறும் கூறிஉள்ளனர். அதனால் பொதுமக்கள் அந்த இடத்தில் தொடர்ந்து பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விநாயகர் சிலை வைக்க பள்ளம்தோண்டிய இடத்தில் சிவலிங்கம், துர்க்கையம்மன் சிலை கிடைத்திருப்பதால் கிராம பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story