பஞ்சமி நில மீட்பு போராட்டம் பெண்கள் உள்பட 600 பேர் பங்கேற்பு


பஞ்சமி நில மீட்பு போராட்டம் பெண்கள் உள்பட 600 பேர் பங்கேற்பு
x
தினத்தந்தி 24 July 2018 3:00 AM IST (Updated: 24 July 2018 12:21 AM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டி அருகே செதில்பாக்கம் கிராமத்தில் பஞ்சமி நில மீட்பு போராட்டம் நடைபெற்றது. இதில் பெண்கள் உள்பட 600 பேர் கலந்து கொண்டனர்.

கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டி தாலுகாவுக்கு உட்பட்ட செதில்பாக்கம் கிராமத்தில் 32 ஏக்கர் பஞ்சமி நிலம் உள்ளது. தற்போது இந்த நிலம் சில தனியார்கள் வசம் உள்ளது. எனவே இந்த பஞ்சமி நிலத்தை மீட்க வலியுறுத்தி நேற்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாயிகள் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் அந்த பகுதியில் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்துக்கு பெரம்பூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணை பொதுச்செயலாளருமான எஸ்.கே.மகேந்திரன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் எஸ்.கண்ணன், பி.சுந்தரராசன், மாவட்டசெயலாளர் எஸ்.கோபால், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் துளசிநாராயணன் உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.

இதில் கலந்து கொண்ட பொதுமக்கள் ஆக்கிரமிப்பில் உள்ள பஞ்சமி நிலத்துக்கு சென்று கோஷம்போட்டு அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த பொன்னேரி கோட்டாட்சியர் முத்துசாமி, கும்மிடிப்பூண்டி தாசில்தார் மதன் குப்புராஜ் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் பிரதிநிதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது மேற்கண்ட நிலம் தொடர்பான ஆவணங்களின் அடிப்படையில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அடுத்த மாதம் 7-ந்தேதி சம்மந்தப்பட்ட நபர்களையும், பஞ்சமி நிலம் மீட்பு போராட்ட குழுவையும் அழைத்து கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்திட திட்டமிடப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து அங்கு வந்திருந்த பெண்கள் உள்பட 600 பேர் தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story