எத்தனை இன்னல்கள் வந்தாலும் தமிழக மக்களின் உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன் சீமான் பேட்டி


எத்தனை இன்னல்கள் வந்தாலும் தமிழக மக்களின் உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன் சீமான் பேட்டி
x
தினத்தந்தி 24 July 2018 4:30 AM IST (Updated: 24 July 2018 12:41 AM IST)
t-max-icont-min-icon

எத்தனை இன்னல்கள் வந்தாலும் தமிழக மக்களின் உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்று சேலத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

சேலம்,

நாம் தமிழர் கட்சி சார்பில் 2016-ம் ஆண்டு சேலம் மணக்காடு பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் வன்முறையை தூண்டும் வகையிலும், அரசுக்கு எதிராக பேசியதாகவும் அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இது தொடர்பான வழக்கு சேலம் 3-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் நேற்று சீமான், கோர்ட்டில் ஆஜராகி வழக்கு சம்பந்தமான குற்றப்பத்திரிகை நகலை பெற்றுக்கொண்டார். இதையடுத்து வழக்கு விசாரணை நாளைக்கு (புதன்கிழமை) தள்ளி வைக்கப் பட்டது.

பின்னர், கோர்ட்டில் இருந்து வெளியே வந்த சீமான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சேலம் மணக்காடு பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் என் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது சம்பந்தமாக கோர்ட்டில் ஆஜரானேன். என் மீது வழக்குப்பதிவு செய்து சிறைக்கும், கோர்ட்டுக்கும் அலைக்கழிப்பதன் மூலம் மிரட்டுகிறார்கள். மக்கள் உரிமைக்காக போராடுவதை நிறுத்த வேண்டும் என்பதற்காகவே வழக்கு பதிவு செய்கிறார்கள்.

சேலம்-சென்னை 8 வழி பசுமை சாலை தேவையில்லாத ஒன்று என மக்கள் கருதுகின்றனர். வீடு, நிலத்தை அளவீடு செய்யும்போது தடுத்து நிறுத்தி மக்கள் போராடுகிறார்கள். ஆனால் அதையெல்லாம் அதிகாரிகள் யாரும் நினைத்து பார்ப்பதில்லை. அதேநேரத்தில் மக்களுக்கு பிடிக்கவில்லை என்றால் 8 வழி சாலைக்கு நாங்களே பூட்டுபோட்டு விடுகிறோம் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசுகிறார். சாலைக்கு எப்படி பூட்டு போட முடியும்?.

மக்களுக்கு பிடிக்காத 8 வழி சாலை திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். தமிழக மக்கள் எங்கு பாதிக்கப்பட்டாலும் அவர்களின் உரிமைக்காக, எத்தனை இன்னல்கள் வந்தாலும் தொடர்ந்து குரல் கொடுப்பேன்.

இவ்வாறு சீமான் கூறினார். 

Next Story