தூத்துக்குடி மாநகராட்சியில் ரூ.996 கோடி மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் - அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்


தூத்துக்குடி மாநகராட்சியில் ரூ.996 கோடி மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் - அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்
x
தினத்தந்தி 23 July 2018 11:45 PM GMT (Updated: 23 July 2018 7:27 PM GMT)

தூத்துக்குடி மாநகராட்சியில் ரூ.996 கோடி செலவில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக, அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, கலெக்டர் சந்தீப் நந்தூரி முன்னிலையில் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்துக்கு முதல்-அமைச்சர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். புதிய திட்டங்கள் அனைத்தையும் அலுவலர்கள் சிறப்பாக விரைந்து முடிக்க வேண்டும். தூத்துக்குடி மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டியாக தேர்வு செய்யப்பட்டு உள்ளது. விரைவில் பல திட்டங்கள் இங்கு செயல்படுத்தப்படும்.

தூத்துக்குடி மாநகராட்சிக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தில் உள்ள பழுதடைந்த டிரான்ஸ்பார்மர் விரைந்து மாற்றப்பட்டு, சீரான குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயத்துக்கு தேவையான உரம், விதை மற்றும் விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை விரைந்து வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிமராமத்து திட்டத்தில் ஒதுக்கப்பட்ட 22 குளங்களையும் விரைந்து தூர்வார வேண்டும். திருச்செந்தூர் பாதாள சாக்கடை திட்டத்தில் கழிவுநீர் கசிவு ஏற்படுவதை உடனடியாக தடுக்க வேண்டும். மாநகராட்சியில் குடிநீர் டெபாசிட் தொகையை தவணை முறையில் வசூலிப்பதை மற்ற நகராட்சிகளிலும் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கலாம்.
இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ், உதவி கலெக்டர் பிரசாந்த், முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன், உதவி கலெக்டர்(பயிற்சி) அனு, மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் கீதாராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும் போது, தூத்துக்குடி மாவட்டத்தில் உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது. தூத்துக்குடி ஸ்மார்சிட்டி ரூ.996 கோடி அளவில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதில் புதிய பஸ் நிலையம் அமைப்பது, உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது, பக்கிள்ஓடையை வெள்ளம் பாதிப்பு இல்லாத வகையில் சீரமைக்கப்பட உள்ளது. பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள பஸ் டெப்போ பஸ்நிலையத்துடன் இணைக்கப்பட்டு கப்பல் வடிவில் அனைத்து நவீன வசதிகளையும் கொண்ட பஸ் முனையமாக மாற்றப்பட உள்ளது. இந்த பணிகள் அனைத்தும் 2019-ம் ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்படும் என்று கூறினார்.

Next Story