பஸ்பாஸ் பெற பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் செல்போன், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்


பஸ்பாஸ் பெற பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் செல்போன், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 24 July 2018 3:45 AM IST (Updated: 24 July 2018 1:03 AM IST)
t-max-icont-min-icon

பி.எம்.டி.சி. பஸ்களில் பயணிக்க சலுகை விலை பஸ்பாஸ் பெற பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் செல்போன் மற்றும் ஆன்லைன் மூலமாக விண்ணப்பம் செய்ய வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு உள்ளது.

பெங்களூரு,

பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகம் (பி.எம்.டி.சி.) சார்பில் ஆண்டுதோறும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு சலுகை விலை பஸ்பாஸ் வழங்கப்பட்டு வருகிறது.

தொடக்க மற்றும் உயர் நிலைப்பள்ளி, பி.யூ. கல்லூரி மாணவ-மாணவிகள் தங்களின் பள்ளி, கல்லூரிகள் வழியாகவும், செல்போன் அல்லது பி.எம்.டி.சி. இணையதளம் வழியாகவும், பிற வகை கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் செல்போன் அல்லது பி.எம்.டி.சி. இணையதளம் வழியாகவும் பஸ்பாஸ் பெற விண்ணப்பிக்கலாம்.

செல்போன் வழியாக பஸ்பாஸ் விண்ணப்பிக்க விரும்பும் மாணவ-மாணவிகள் ஐ.வி.ஆர். முறையில் கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். அதன்படி, மாணவ-மாணவிகள் தங்களின் செல்போனில் 161 என்ற எண்ணுக்கு போன் செய்து, கன்னடம் அல்லது ஆங்கில மொழியை தேர்வு செய்யவேண்டும். அதைத்தொடர்ந்து எண் 6-ஐ அழுத்த வேண்டும். பின்பு, எண் 2-ஐ அழுத்த வேண்டும். இதையடுத்து அந்த செல்போன் எண்ணுக்கு பஸ்பாஸ் விண்ணப்பத்துக்கான ‘லிங்க்‘ உடன் குறுஞ்செய்தி வரும். இந்த விண்ணப்பத்தை கொண்டு சலுகை விலை பஸ்பாஸ்க்கு விண்ணப்பிக்கலாம்.

இதுதவிர www.mybmtc.com என்ற இணையதளம் வழியாகவும் மாணவ- மாணவிகள் விண்ணப்பம் செய்யலாம். இந்த விண்ணப்பங்களை பெற்று கொண்ட பின் பி.எம்.டி.சி. நிர்வாகம் சம்பந்தப்பட்ட பள்ளி-கல்லூரிகளுக்கு விண்ணப்பங்களை அனுப்பி பரிசீலனை செய்தபின்னர் பஸ்பாஸ்களை வினியோகம் செய்யும்.

‘ஸ்மார்ட் கார்டு’ வகையில் பஸ்பாஸ் பெற மாணவ-மாணவிகள் மின்னணு முறையில் விண்ணப்பிக்கலாம். பின்னர், ‘ஸ்மார்ட் கார்டு’ சம்பந்தப்பட்ட மாணவ-மாணவிகளுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும். இதற்கான கட்டணத்தை மாணவ- மாணவிகள் ஆன்லைன் மூலமாகவும், பணமாகவும் செலுத்தும் வசதி உள்ளது.

பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் தங்களுக்கான பஸ்பாஸ் விண்ணப்பங்களை வருகிற 31-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அடுத்தமாதம் (ஆகஸ்டு) மாதம் 1-ந் தேதி முதல் மாணவ-மாணவிகள் தங்களுக்கு வழங்கப்பட்ட ‘ஸ்மார்ட் கார்டு‘ வடிவிலான பஸ்பாஸ் அல்லது அதற்கான ஒப்புகை சீட்டு மூலம் பஸ்களில் பயணிக்கலாம்.

மேற்கண்ட தகவல் பி.எம்.டி.சி. வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story