4-வது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு: 2 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு


4-வது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு: 2 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு
x
தினத்தந்தி 24 July 2018 4:15 AM IST (Updated: 24 July 2018 1:47 AM IST)
t-max-icont-min-icon

4-வது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பதால் சேலம் மாவட்டத்தில் 2 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

சேலம்,

பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வரவேண்டும், சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு ஆண்டுக்கு ஒருமுறை சுங்க கட்டணம் வசூலிக்க வேண்டும், 3-ம் நபர் காப்பீடு கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் நாடு முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சேலம் மாவட்டத்தில் 34 ஆயிரம் லாரிகள் ஓடவில்லை. இந்த வேலைநிறுத்தம் நேற்று 4-வது நாளாக நீடித்தது. இதனால் சேலம் மாவட்டத்தில் இருந்து வெளி மாநிலங்கள் மற்றும் மாநிலத்திற்குள் செல்லும் சரக்குகள் செல்லாமல் தேக்கமடைந்து உள்ளன. அரிசி, பருப்பு, மஞ்சள், ஜவ்வரிசி, இரும்பு தளவாட பொருட்கள், ஜவுளி, புளி உள்ளிட்ட பொருட்கள் தேக்கம் அடைந்துள்ளன.

சேலம் செவ்வாய்பேட்டையில் உள்ள லாரி மார்க்கெட்டில் 4-வது நாளாக தொடர்ந்து லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் செவ்வாய்பேட்டை, லீபஜார் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகள் நேற்று லாரிகள் ஓடாததால் வெறிச்சோடி காணப்பட்டன. குறிப்பாக லாரி டிரைவர்கள், கிளனர்கள், மூட்டை தூக்கும் தொழிலாளர்கள் உள்பட பலர் வருமானம் இன்றி தவிக்கின்றனர். இதனால் அவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

வெளிமாநிலங்களில் இருந்து காய்கறிகள் வரத்து மாவட்டத்திற்கு குறைந்து உள்ளதால், சில காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது. இதில் குறிப்பாக இஞ்சி மட்டும் கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து லீ பஜார் வர்த்தக சங்க செயலாளர் சந்திரசேகர் கூறும் போது, ‘லாரிகள் வேலைநிறுத்தத்தால் இதுவரை லீ பஜாரில் பெருமளவு பாதிப்பு ஏதும் இல்லை. தற்போது குடோன்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் லாரிகள் வேலைநிறுத்தம் நீடித்தால் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயர வாய்ப்புள்ளது‘ என்றார்.

இதுகுறித்து அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் நிர்வாக குழு உறுப்பினரும், சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க தலைவருமான சென்னகேசவன் கூறும் போது, ‘நாடு முழுவதும் லாரிகள் வேலைநிறுத்தம் தொடர்வதால் சேலம் மாவட்டத்தில் 34 ஆயிரம் லாரிகள் ஓடவில்லை. மாவட்டத்தில் கடந்த 4 நாட்களில் ரூ.300 கோடிக்கு மேல் மதிப்புள்ள சரக்குகள் தேக்கமடைந்து வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. லாரி உரிமையாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.5 கோடி முதல் வாடகை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. முக்கியமாக சேலம் மாவட்டத்தில் இந்த வேலைநிறுத்ததால் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 2 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே விரைவில் லாரி உரிமையாளர்கள் கோரிக்கைகளுக்கு தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என்று கூறினார். 

Next Story