கர்நாடகத்தில், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் முதல்-மந்திரி குமாரசாமி அறிவிப்பு


கர்நாடகத்தில், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் முதல்-மந்திரி குமாரசாமி அறிவிப்பு
x
தினத்தந்தி 24 July 2018 5:00 AM IST (Updated: 24 July 2018 1:48 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் எஸ்.சி, எஸ்.டி. மாணவ-மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டு வருகிறது.

பெங்களூரு,

இந்த நிலையில் அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் அனைத்து பிரிவு மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் என்று மாணவ அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக கர்நாடக பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் என்று மாணவ-மாணவிகள் எதிர்பார்த்தனர். ஆனால் பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த மாணவ-மாணவிகள், இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 21-ந்தேதி மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் முதல்-மந்திரி குமாரசாமி அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு மட்டும் அரசு சார்பில் இலவச பஸ் பாஸ் வழங்கப்படும் என்று நேற்று அறிவித்தார்.

அதாவது அவர் நேற்று ராமநகர் மாவட்டம் சென்னபட்டணாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அதைத்தொடர்ந்து சென்னப்பட்டணாவில் வாக்காளர் களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்று குமாரசாமி பேசியதாவது:-

எனக்கு வாக்களித்து அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்த உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். இங்கு வந்தாலே எனக்கு உத்வேகம் வந்துவிடுகிறது. நீங்கள் காட்டும் இந்த அன்பை நான் மறக்க மாட்டேன். நான் ஏதோ 3 மாவட்டங்களுக்கு மட்டும் அதிக நிதி ஒதுக்கியதாக குறை சொல்கிறார்கள்.

மாநிலத்தில் இதுவரை எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்ட என்பது குறித்து விவாதிக்க தயாராக உள்ளேன். குடகு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தேன். அங்கு வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள ரூ.100 கோடி ஒதுக்குவதாக அறிவித்து உள்ளேன். நான் பாரபட்சம் பார்ப்பது இல்லை. மாநிலத்தின் அனைத்து பகுதி களையும் சரிசமமாக பார்க் கிறேன்.

தனியார் மற்றும் அரசு பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் என்று கேட்கிறார்கள். அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே இலவச பஸ் பாஸ் வழங்கப்படும். இதுகுறித்து நாளை (அதாவது இன்று) நடைபெறும் கூட்டத்தில் ஆலோசித்து இறுதி முடிவு எடுப்பேன். தனியார் பள்ளிகளில் பெற்றோர் ரூ.50 ஆயிரம், ரூ.1 லட்சம் கட்டணம் செலுத்தி தங்களின் குழந்தைகளை படிக்க வைக்கிறார்கள். அவர்களுக்கு எதற்காக இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும்?. இவ்வாறு குமாரசாமி பேசினார்.

அடிக்கல் நாட்டு விழாவில் குமாரசாமியின் மனைவி அனிதா குமாரசாமி உள்பட பலர் கலந்துகொண்டார். குமாரசாமி பொதுமக்களிடம் குறைகளை கேட்டு அறிந்தார்.

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே இலவச பஸ் பாஸ் வழங்கப்படும் என முதல்-மந்திரி குமாரசாமி அறிவித்துள்ளதன் மூலம், அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story