நெல்லிக்குப்பம் அருகே மருதாடு மணல் கிடங்கை ஒப்பந்த நிறுவனத்தினர் பூட்டியதால் பரபரப்பு


நெல்லிக்குப்பம் அருகே மருதாடு மணல் கிடங்கை ஒப்பந்த நிறுவனத்தினர் பூட்டியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 24 July 2018 3:45 AM IST (Updated: 24 July 2018 2:14 AM IST)
t-max-icont-min-icon

நெல்லிக்குப்பம் அருகே மருதாடு கிராமத்தில் மணல் கிடங்கை ஒப்பந்த நிறுவனத்தினர் பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் மணல் விற்பனை முற்றிலும் பாதிக்கப்பட்டது.

நெல்லிக்குப்பம்,

நெல்லிக்குப்பம் அருகே வான்பாக்கம், அழகியநத்தம் கிராமத்தில் உள்ள தென்பெண்ணையாற்றில் அரசு மணல் குவாரி இயங்கி வருகிறது. இங்கிருந்து டிப்பர் லாரிகளில் மணல் அள்ளப்பட்டு மருதாடு கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள மணல் கிடங்கில் மணல் குவித்து வைக்கப்படுகிறது. பின்னர் ஆன்–லைன் மூலம் பதிவு செய்தவர்களில் முன்னுரிமை அடிப்படையில் மருதாடு கிடங்கில் இருந்து மணல் விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த பணியை அரசு அதிகாரிகள் முன்னிலையில் தனியார் ஒப்பந்த நிறுவனம் செய்து வருகிறது.

இதன் மூலம் தினமும் 100–க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகளில் மணல் ஏற்றி பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

குவாரியில் இருந்து மணல் விற்பனை செய்யும் பணியில் ஈடுபட்டு வரும் தனியார் ஒப்பந்த நிறுவனம், மற்றொரு ஒப்பந்த நிறுவனத்தின் மூலம் மருதாடு கிராமத்தில் ரூ.55 லட்சம் செலவில் மணல் கிடங்கை அமைத்தது. ஆனால் இதற்கான செலவு தொகை ரூ.55 லட்சத்தை ஒப்பந்த நிறுவனத்திற்கு வழங்கப்படவில்லை. இது குறித்து 2 தனியார் ஒப்பந்த நிறுவனத்தினருக்கு இடையே பலகட்ட பேச்சுவார்த்தை நடந்ததும் மணல் கிடங்கு அமைத்த நிறுவனத்திற்கு பணம் கிடைக்கில்லை.

இதனால் கிடங்கு அமைத்த ஒப்பந்த நிறுவனத்தினர் நேற்று திடீரென மணல் கிடங்கை பூட்டி, லாரிகள் செல்லாதவாறு நுழைவு வாயிலில் இரும்பு குழாய்களை பதித்தனர். இதன் காரணமாக மணல் குவாரியில் இருந்து விற்பனையான மணல்கள் வெளியூர்களுக்கு எடுத்து செல்லும் பணியும், குவாரியில் இருந்து கிடங்குக்கு மணல் ஏற்றி வரும் பணியும் முற்றிலும் தடைப்பட்டது.

இது பற்றி தகவல் அறிந்த நெல்லிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் பொதுப்பணித்துறை அதிகாரிகள், போலீசார் தனியார் ஒப்பந்த நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுமுக தீர்வு ஏற்படவில்லை.

இதையடுத்து தற்காலிகமாக பூட்டப்பட்ட கிடங்கு மற்றும் மணல் குவாரி பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story