மேலூர் அருகே தொழில் அதிபர் கடத்தல் சம்பவத்தில் மேலும் ஒருவர் கைது கடத்தப்பட்ட உதவியாளரும் மீட்பு
மேலூர் அருகே தொழில் அதிபர் கடத்தல் சம்பவத்தில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்,
மேலூர்,
மேலூர் அருகே அரிட்டாபட்டியில் உள்ள ரப்பர் தொழிற்சாலை அதிபர் ஜோஸ்மேட்டிவ். இவர் நேற்று முன்தினம் தனது உதவியாளர் மத்தாயி என்பவருடன் தொழிற்சாலைக்கு காரில் சென்றார். காரை ஷியாம் என்பவர் ஓட்டினார். மேலூர் அருகே உள்ள நரசிங்கம்பட்டி பகுதியில் கார் சென்றபோது 6 பேர் கொண்ட மர்மகும்பல் வழிமறித்து தாக்கியது. பின்னர் ஜோஸ்மேட்டிவ், மத்தாயி கடத்தப்பட்டனர். இந்த சம்பவத்தில் தொழில் அதிபர் ஜோஸ் மேட்டிவ் மீட்கப்பட்டு மதுரை வில்லாபுரத்தை சேர்ந்த கார்த்திக் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவலின்படி வில்லாபுரத்தை சேர்ந்த மனோஜ் (26) என்பவரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர்.
தொழில் அதிபர் ஜோஸ்மேட்டிவின் உதவியாளர் மத்தாயி என்பவரை போலீசார் மீட்கமுடியாத நிலையில் மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையம் அருகே அவரையும் மர்மகும்பல் விடுவித்தது. தகவல் கிடைத்த தனிப்படை போலீசார் மத்தாயியை மீட்டனர்.
கடத்தல் சம்பவத்தின்போது மர்மகும்பல் வந்த 2 கார்களில் ஒன்று பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே மர்மகும்பல் பயன்படுத்திய மற்றொரு கார் நின்று கொண்டிருந்தது. அந்த காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேரில் 2 பேர் மட்டுமே கைதாகி உள்ளனர். மீதமுள்ளவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.