இலவச வீட்டு மனை பட்டா கேட்டு கலெக்டரிடம் மனு
இலவச வீட்டு மனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.
விருதுநகர்,
விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் நிகழ்ச்சியின் போது பல்வேறு கிராம மக்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
விருதுநகர் அருகே உள்ள மல்லாங்கிணறு அண்ணாநகர் பகுதி மக்கள் தங்கள் பகுதியில் குடிநீர், தெருவிளக்கு, சாலை, கழிவுநீர் கால்வாய் போன்ற அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாத நிலையில் மிகுந்த சிரமப்பட்டு வருவதாகவும் புறக்கணிக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து வரும் தங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மனு கொடுத்தனர்.
அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆத்திப்பட்டி பஞ்சாயத்து ரெங்கா நகர் பகுதி மக்கள் கொடுத்த மனுவில், தங்கள் பகுதியில் தனியார் நிறுவனம் ஆழ்குழாய் கிணறு அமைத்து தினசரி 1 லட்சம் லிட்டருக்கு மேல் தண்ணீர் எடுத்து லாரிகள் மூலம் விற்பனை செய்து வருவதால் தங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் எனவே அந்த நிறுவனம் தண்ணீர் எடுப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தனர்.
அருப்புக்கோட்டை அருகே உள்ள செட்டிகுறிச்சி கிராமம் இந்திரா காலனியை சேர்ந்த அருந்ததியர் சமுதாய மக்கள் தங்களுக்கு ஆதிதிராவிட நலத்துறை மூலமாக இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கோரியிருந்தனர்.
காரியாபட்டி அருகே உள்ள கரிசல் குளத்தை சேர்ந்த நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த 65 குடும்பத்தினருக்கு கரியநேந்தல் கிராமத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க உத்தரவிடுமாறு கோரினர்.
ராஜபாளையம் தாலுகாவில் உள்ள சோழபுரம் கிராமத்தில் பனைமேடு காலனி பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காகவும் மயானம் அமைப்பதற்காகவும் பொதுச்சாவடி மற்றும் கோவில் கட்டுவதற்கும் தனிநபரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளஅங்குள்ள 59 சென்ட் நிலத்திலிருந்து ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க கோரினர்.
ராஜபாளையம் வடக்குமலையடிப்பட்டி பகுதியில் உள்ள மலைக்குறவர் சமுதாய மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு சாதிச்சான்றிதழ் வழங்க உத்தரவிடுமாறு கோரி மனு கொடுத்தனர்.
தொப்பலாகரை கிராமத்தை சேர்ந்த ராஜ கம்பள சமுதாய மக்கள் தங்கள் கிராமத்தில் உள்ள ரெங்கநாச்சி அம்மன் கோவில் அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ. உத்தரவின்படி திருவிழா நடத்தவும் அனைத்து சமுதாய மக்களும் கோவிலுக்குள் சென்று வழிபடவும் அனுமதி வழங்குவதோடு உரிய பாதுகாப்பு அளிக்க உத்தரவிடுமாறும் கோரியிருந்தனர்.
மதுரை மண்டல குலாளர் மண்பாண்ட தொழிலாளர் நல சங்கத்தினர் கோவில்களில் மண் அகல் விளக்கு ஏற்றுவதற்று தடை விதிக்கப்பட்டுள்ளதால் தங்கள் சமுதாயத்தினர் பாதிப்படைந்துள்ளதாகவும் அத்தடையை நீக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறும் கோரி மனு கொடுத்தனர்.