வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதாக ரூ.28 லட்சம் மோசடி, பாதிக்கப்பட்ட 7 இளைஞர்கள் கலெக்டரிடம் மனு
வெளிநாடு அனுப்புவதாகக் கூறி 7 பேரிடம் ரூ.28 லட்சம் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்டவர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகள் குறித்து மனுக்கள் அளித்தனர்.
அப்போது லிங்கராஜ், கபிலன் உள்ளிட்ட 7 இளைஞர்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:–
ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஏஜெண்டுகள் மற்றும் மன்னார்குடியைச் சேர்ந்த குமார் ஆகியோர் ஆஸ்திரேலியாவில் உள்ள அலுமினிய கம்பெனிக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி எங்களிடம் தலா ரூ.4 லட்சம் வீதம் ரூ.28 லட்சம் வாங்கினர். இந்த பணத்தை பெற்றுக்கொண்டவர்கள் வியட்நாம், கம்போடியா உள்ளிட்ட நாடுகளுக்கு அழைத்து சென்று அலைக்கழித்து வேலை இல்லை என்று கூறி தலைமறைவாகி விட்டனர்.
இதனால் சாப்பிடக்கூட வழியில்லாமல் ஊரில் இருந்து பணம் அனுப்பச்சொல்லி கூடுதல் காலம் தங்கியிருந்த அபராதத்தொகை என மொத்தம் ரூ.54,000 செலுத்தி ஊர்வந்து சேர்ந்துள்ளோம். இதுகுறித்து கேட்டபோது காசோலை வழங்கினர். அந்த காசோலை பணம் இல்லாமல் திரும்பி வந்துவிட்டது. இதன்பின்னர் தற்போது எங்களை ஏஜெண்டு குமார் மிரட்டி வருகிறார். எனவே, உடனடியாக நடவடிக்கை எடுத்து எங்களின் பணத்ம் திரும்ப கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
திருவாடானை சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்த தங்கம் என்பவரது மகன்கள் மாதவன், பிரபுதேவா ஆகியோர் கலெக்டரிடம் அளித்த மனுவில், “பிறவியிலேயே கண்பார்வை இல்லாத நரிக்குறவர் இனத்தை சேர்ந்த நாங்கள் தஞ்சை சிறப்பு பள்ளியில் படித்துள்ளோம். தற்போது உயர்கல்வி பயில்வதற்கு சாதி சான்றிதழ் கேட்கின்றனர். பள்ளி மாற்றுச்சான்றிதழில் நரிக்குறவர் என்று இருக்கும்போது அதிகாரிகள் சாதிசான்றிதழ் தர மறுக்கின்றனர். உயர்கல்வி பயில சாதி சான்றிதழ் இருவருக்கும் வழங்க வேண்டும்.” என்று கோரியிருந்தனர்.
பரமக்குடி அருகே உள்ள வல்லம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், தங்கள் பகுதிக்கு பரமக்குடியில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு வந்து சேரும் பஸ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென நிறுத்தப்பட்டுவிட்டது. இதன் காரணமாக இரவு நேரத்தில் அந்த பஸ்சை நம்பி இருந்த அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே, நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் அந்த நேரத்தில் இயக்க வேண்டும் என்று மனு கொடுத்தனர்.
இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் நடராஜன் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.