ஆகஸ்டு 9–ந்தேதி தொழிலாளர் வேலை இழப்பை கண்டித்து மறியல் போராட்டம் - சவுந்தரராஜன் பேட்டி
தொழிலாளர் வேலை இழப்பை கண்டித்து வருகிற ஆகஸ்டு மாதம் 9–ந்தேதி மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று சி.ஐ.டி.யு. மாநில தலைவர் சவுந்தரராஜன் கூறினார்.
ஈரோடு,
சி.ஐ.டி.யு. செயற்குழு கூட்டம் ஈரோட்டில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில தலைவர் சவுந்தரராஜன் தலைமை தாங்கி பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
மோட்டார் தொழிலாளர் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இதை கண்டித்து வருகிற ஆகஸ்டு மாதம் 7–ந் தேதி தேசிய அளவில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற உள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ரூ.6 ஆயிரம் கோடி நிலுவையில் உள்ளது. இந்த தொகையை வழங்க மீண்டும் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்பட உள்ளது.
பெருந்துறையில் செயல்படும் மருத்துவ கல்லூரியை தமிழக அரசிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இது போக்குவரத்து தொழிலாளர்களுக்கு செய்யும் துரோகம். போக்குவரத்து தொழிலாளர்களின் பணத்தில் அந்த கல்லு£ரி கட்டப்பட்டது. இந்த கல்லூரியை அரசிடம் ஒப்படைத்தால், போக்குவரத்து தொழிலாளர்கள் குழந்தைகளின் இட ஒதுக்கீடு வாய்ப்பு பறிபோகும். எனவே இந்த முடிவை கைவிட வேண்டும்.
மத்திய அரசின் நடவடிக்கையால் அனைத்து தொழில்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. 50 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டு 5 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர். இதுபோன்ற செயல்பாட்டை கண்டித்து ஆகஸ்டு மாதம் 9–ந் தேதி தேசிய அளவில் மறியல் போராட்டம் நடத்தப்படும்.
அரசு பஸ்கள் கண்டக்டர் இல்லாமல் இயக்கப்படுகிறது. இந்த பஸ்களில் கூட்டமும் இருப்பதில்லை. மோட்டார் வாகன சட்டப்படி கண்டக்டர் இல்லாமல் பஸ்கள் இயக்கக்கூடாது. பயணிகளுக்கு பாதுகாப்பாக கண்டக்டர் செயல்படுகிறார்கள். எனவே கண்டக்டர்கள் இல்லாமல் அரசு பஸ்கள் இயக்கக்கூடாது என்று ஐகோர்ட்டில் வழங்கு தொடரப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.