கேரளாவுக்கு காய்கறி ஏற்றிச்சென்ற தமிழக லாரி மீது கல்வீச்சு; கிளீனர் பரிதாப சாவு


கேரளாவுக்கு காய்கறி ஏற்றிச்சென்ற தமிழக லாரி மீது கல்வீச்சு; கிளீனர் பரிதாப சாவு
x
தினத்தந்தி 24 July 2018 6:00 AM IST (Updated: 24 July 2018 2:16 AM IST)
t-max-icont-min-icon

கேரளாவுக்கு காய்கறி ஏற்றிச்சென்ற தமிழக லாரி மீது மர்ம கும்பல் கல் வீசி தாக்கியதில், கிளீனர் பரிதாபமாக உயிரிழந்தார். டிரைவர் காயத்துடன் உயிர் தப்பினார்.

கோவை,

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஏற்றிக்கொண்டு நாள்தோறும் ஏராளமான லாரிகள் கேரளாவுக்கு சென்று வருகின்றன. தற்போது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் நாடு முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

எனினும் தற்காலிக டிரைவர்கள் மூலம் சில லாரிகளில் கேரளாவுக்கு காய்கறி உள்ளிட்ட பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன. அந்தவகையில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் இருந்து காய்கறிகளை ஏற்றிக்கொண்டு நேற்று முன்தினம் இரவு ஒரு லாரி கேரளாவுக்கு சென்றது.

இந்த லாரியை மேட்டுப்பாளையத்தை சேர்ந்த நூருல்லா (வயது 26) என்பவர் ஓட்டிச்சென்றார். அன்னூரை சேர்ந்த முருகேசன் என்பவரின் மகன் விஜய் என்கிற முபாரக் பாட்ஷா (21) கிளீனராக இருந்தார். இந்த லாரி நேற்று அதிகாலை 3 மணியளவில் கேரள மாநிலம் கஞ்சிக்கோடு அருகே சென்றுகொண்டு இருந்தது.

அப்போது ஒரு கார் மற்றும் 4 மோட்டார் சைக்கிள்களில் அங்கு வந்த சுமார் 15 பேர் கொண்ட கும்பல் ஒன்று, லாரியை வழி மறித்து சிறைபிடித்தது. பின்னர், வேலை நிறுத்த நேரத்தில் எப்படி காய்கறிகளை ஏற்றி வரலாம்? எனக்கூறி டிரைவர் மற்றும் கிளீனருடன் அவர்கள் தகராறில் ஈடுபட்டனர்.

இதில் ஆத்திரம் அடைந்த சிலர் லாரி மீது கற்களை வீசினார்கள். இதில் லாரியின் கண்ணாடிகள் நொறுங்கின. மேலும் கிளீனர் விஜய்யின் தலையிலும், மார்பிலும் கற்கள் பலமாக தாக்கின. இதில் அவர் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார். டிரைவர் நூருல்லாவும் காயம் அடைந்தார். உடனே அந்த கும்பல் வாகனங்களில் ஏறி தப்பிச்சென்றுவிட்டது.

பின்னர் காயமடைந்த நூருல்லா, கிளீனர் விஜய்யை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் போகும் வழியிலேயே விஜய் பரிதாபமாக இறந்தார். இதைத்தொடர்ந்து நூருல்லா, பாலக்காடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பாலக்காடு போலீஸ் துணை சூப்பிரண்டு விஜயகுமார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டார். பின்னர் கஸபா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அவர்கள், சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

லாரி கிளீனர் பலியானதை தொடர்ந்து கோவை வழியாக கேரளாவுக்கு சரக்கு போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இந்த கொலைக்கு கண்டனம் தெரிவித்து, கோவை மற்றும் மேட்டுப்பாளையம் பகுதிகளை சேர்ந்த டிரைவர்கள், கேரளாவுக்கு காய்கறிகளை ஏற்றி செல்லமாட்டோம் என அறிவித்து உள்ளனர்.

இந்த சம்பவத்தால் கோவை–கேரள எல்லைப்பகுதியான வாளையாறு மற்றும் கஞ்சிக்கோடு பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.


Related Tags :
Next Story