4-வது நாளாக வேலைநிறுத்தம் தீவிரம்: திருச்சியில் 4 மாவட்ட லாரி உரிமையாளர்கள் போராட்டம் நடத்த முடிவு


4-வது நாளாக வேலைநிறுத்தம் தீவிரம்: திருச்சியில் 4 மாவட்ட லாரி உரிமையாளர்கள் போராட்டம் நடத்த முடிவு
x
தினத்தந்தி 24 July 2018 4:30 AM IST (Updated: 24 July 2018 2:17 AM IST)
t-max-icont-min-icon

4-வது நாளாக வேலைநிறுத்த போராட்டம் தீவிரம் அடைந்ததால் 4 மாவட்ட லாரி உரிமையாளர்கள் திருச்சியில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். வேலைநிறுத்தத்தால் தற்போது ரெயிலில் சரக்குகள் அனுப்புவது அதிகரித்துள்ளது.

திருச்சி,

லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் திருச்சி மாவட்டத்திலும் நேற்று 4-வது நாளாக நீடித்தது. இதுவரை 50 முதல் 60 சதவீத லாரிகளே ஓடாமல் இருந்தன. ஆனால் நேற்று முதல் 90 சதவீத லாரிகள் ஓடாமல் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. திருச்சி மாவட்டத்திற்கு வெளிமாவட்டங்களில் இருந்து காய்கறி உள்ளிட்ட சரக்குகள் ஏற்றி வந்த லாரிகள் நேற்று மணப்பாறை பகுதியில் லாரி உரிமையாளர்கள் சிலரால் தடுத்து நிறுத்தப்பட்டு, சிறைபிடிக்கப்பட்டன. போலீசார் வந்து சமாதானம் செய்த பின்னரே லாரிகளை விடுவித்தனர்.

இந்நிலையில் லாரி உரிமையாளர்கள் தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்தி இருக்கிறார்கள். இதன் காரணமாக திருச்சியில் இருந்து வட மாநிலங்களுக்கு சரக்குகள் எடுத்து செல்லக்கூடிய லாரி புக்கிங் அலுவலகங்கள் மற்றும் ஏஜெண்டு அலுவலகங்கள் மூடப்பட்டு இருந்தன. இதனால், வாடகைக்கு லாரிகளை அமர்த்தும் வணிகர்கள், வியாபாரிகள் சரக்குகளை பார்சல்கள் மூலம் ரெயில்களில் அனுப்புவது அதிகரித்துள்ளது.

திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் உள்ள ரெயில்வே பார்சல் புக்கிங் அலுவலகத்தில் வெளியூர்களுக்கு சரக்கு மூட்டை பார்சல்களை அனுப்ப வியாபாரிகள் குவித்து வைத்திருந்தனர். வாழைக்காய் மற்றும் இதர சரக்குகள் ரெயில்கள் மூலம் அனுப்பப்பட்டன. மாவட்டத்தின் பல ஊர்களில் இருந்து சரக்குகள் அரசு பஸ்களிலும் எடுத்து வரப்பட்டன. மேலும் மினி சரக்கு வேன் மற்றும் தள்ளுவண்டிகள் மூலமும் காந்தி மார்க்கெட்டுக்கு காய்கறிகள் கொண்டு வரப்பட்டன. வேலைநிறுத்தம் தீவிரம் அடைந்ததையொட்டி காய் கறிகள் உள்ளிட்ட இதர பொருட்களின் விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது.

எனவே, லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

வேலைநிறுத்தம் குறித்து திருச்சி மாவட்ட லாரி உரிமையாளர் சங்க தலைவர் சுப்பு கூறியதாவது:-

சரக்கு லாரிகளில் வெளியூர்களில் இருந்து திருச்சிக்கும், திருச்சியில் இருந்து வெளியூர்களுக்கும் சரக்குகள் அனுப்புவது அடியோடு நிறுத்தப்பட்டது. எங்களது கோரிக்கை தொடர்பாக தமிழ்நாட்டில் சில இடங்களில் போராட்டமும் நடத்தப்பட்டுள்ளது. திருச்சியில் இன்னும் 2 நாட்களில் திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, அரியலூர் ஆகிய 4 மாவட்ட லாரி உரிமையாளர்கள் ஒருங்கிணைந்து போராட்டம் நடத்த முடிவு செய்திருக்கிறோம். அதற்காக மாநில தலைவர் குமாரசாமியிடம் அனுமதி கேட்டுள்ளோம். எனவே, அவரது தலைமையில் மிகப்பெரிய போராட்டம் திருச்சியில் நடக்கும். இந்த போராட்டத்தில் லாரி டிரைவர்களும் பங்கேற்பார்கள். எங்களைவிட அவர்கள் தான் வேலையில்லாமல் அதிகளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். வேலைநிறுத்த போராட்டம் காரணமாக கடந்த 4 நாட்களில் சுமார் ரூ.70 கோடி வரை லாரி உரிமையாளர்களுக்கு வர்த்தக இழப்பு ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Next Story