தரமற்ற நெல்விதை கொடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கலெக்டரிடம் விவசாயிகள் புகார்


தரமற்ற நெல்விதை கொடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கலெக்டரிடம் விவசாயிகள் புகார்
x
தினத்தந்தி 24 July 2018 4:15 AM IST (Updated: 24 July 2018 2:50 AM IST)
t-max-icont-min-icon

அரிசி ஆலையில் வாங்கிய விதைநெல்லை நடவு செய்து 102 நாளாகியும் நெற்கதிர்கள் வரவில்லை என குறைதீர்வு நாள் கூட்டத்தில் விவசாயிகள் புகார் அளித்தனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கி பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். கல்வி உதவித்தொகை, வங்கிக்கடனுதவி, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை மற்றும் உபகரணங்கள் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 400-க்கும் மேற்பட்ட மனுக்கள் கலெக்டரிடம் வழங்கப்பட்டது.

இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி அதன் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி உத்தரவிட்டார். மேலும், நிலுவையிலுள்ள மனுக்களின் மீது எடுக்கப்பட்ட தொடர் நடவடிக்கைகள் குறித்தும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

முன்னதாக திருவண்ணாமலை மெய்யூர் ஓம் சக்தி நகரை சேர்ந்த நரிக்குறவர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கோரிக்கை மனு அளிக்க கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகில் தரையில் அமர்ந்து காத்திருந்தனர். அப்போது காரில் கலெக்டர் அலுவலகத்துக்குள் வந்து கொண்டிருந்தார்.

நரிகுறவர்களை கண்டதும் காரில் இருந்து இறங்கி அவர்களிடம் சென்று கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்டு, கோரிக்கையை கேட்டறிந்தார்.

அப்போது அவர்கள் கூறியதாவது:-

நாங்கள் மெய்யூர் ஓம் சக்தி நகரில் சுமார் 10 வருடங்களுக்கு மேலாக வசித்து வருகிறோம். எங்களது இடத்திற்கு கடந்த 6 வருடத்திற்கு முன்பு பட்டா வழங்கப்பட்டது. அங்கு எங்களது சமூகத்தை சேர்ந்த சுமார் 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் அடிப்படை தேவையான குடிநீர் வசதி, சாலை வசதி, தெருவிளக்கு வசதி போன்றவை இல்லாததால் நாங்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம்.

எங்கள் பகுதியை கலெக்டர் நேரில் வந்து பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். அவர்களது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கலெக்டர் நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்வதாக கூறினார். இதனால் மகிழ்ச்சி அடைந்த நரிகுறவர்கள் கைகளை தட்டி ஆரவாரம் செய்தனர்.

கூட்டத்தில் வேங்கிக்கால் கோட்டாம்பாளையம் கிராம மக்கள் கொடுத்த மனுவில் “எங்கள் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர். கோவில் இடத்தினை முறைப்படி உதவி கலெக்டர் மூலம் மீட்டு தர வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.

கூட்டத்தில் போளூர், ஆரணி தாலுகாவை சேர்ந்த விவசாயிகள் கதிர்வராத நெற்பயிரை ஏந்தியவாறு வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

ஆரணி மற்றும் களம்பூர், கஸ்தம்பாடி, ஏந்துவாம்பாடி, அய்யம்பேட்டை, இலுப்பகுணம் மற்றும் சுற்று வட்டாரத்தை சோந்த விவசாயிகளாகிய நாங்கள் கஸ்தம்பாடியில் உள்ள ஒரு அரிசி ஆலையில் விவசாயத்திற்கு சுமார் 1000 மூட்டைக்கு மேல் விதை நெல் வாங்கினோம். அந்த விதை நெல்லை நடவு செய்து 102 நாட்கள் ஆகியும் நெற்கதிர்கள் வரவில்லை.

இது குறித்து அரிசி ஆலை அதிபரிடம் கேட்டபோது அவர் எந்த பதிலையும் கூறவில்லை. பின்னர் போளூர் வேளாண்மை துறை அதிகாரிகளிடம் கேட்டபோது உங்களை யார் தரமற்ற நெல்விதைகளை வாங்க சொன்னது, எங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறிவிட்டார். இதனால் 1 ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வரை எங்களுக்கு இழப்பீடு ஏற்பட்டு உள்ளது. எனவே தரமற்ற விதை நெல் கொடுத்து விளைச்சல் இல்லாமல் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

Next Story