பணி நியமன ஆணை வழங்க கோரி அங்கன்வாடி மையங்களை பூட்டி பணியாளர்கள் போராட்டம்


பணி நியமன ஆணை வழங்க கோரி அங்கன்வாடி மையங்களை பூட்டி பணியாளர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 24 July 2018 4:15 AM IST (Updated: 24 July 2018 3:51 AM IST)
t-max-icont-min-icon

நேர்காணல் மூலம் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்க கோரி அங்கன்வாடி மையங்களை பூட்டி பணியாளர்கள், உதவியாளர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் அங்கன்வாடி மையங் களின் சாவிகளை ஒப்படைக்க கலெக்டர் அலுவலகத்திற்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர்,

தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சமூக நலத்துறை பணியாளர் சங்கம் மற்றும் அனைத்து அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்றுகாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளர் சங்க மாநில பொருளாளர் பானு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கலா, மாவட்ட தலைவி ரேவதி, சமூகநலத்துறை பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ரெங்கசாமி, சமூகநலத்துறை பணியாளர் சங்க மாவட்ட தலைவர் விஜயராகவன், அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளர் சங்க மாநில இணைச் செயலாளர் அம்புஜம், மாதர் சங்க மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வி மற்றும் பல்வேறு சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் கீழ்க்கண்ட கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.

தஞ்சை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 1,629 முதன்மை மையங்களும், 120 குறு மையங்களும் என மொத்தம் 1,749 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இந்த மையங்கள் மூலம் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படாத வகையில் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

மேலும் இவர்கள், 3 முதல் 5 வயது குழந்தைகளுக்கு சத்துணவுடன் கல்வியும் கற்று கொடுக்கின்றனர். முதன்மை மையங்களுக்கு ஒரு அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளரும், குறு அங்கன்வாடி மையங்களுக்கு ஒரு அங்கன்வாடி பணியாளரும் பணி புரிந்து வருகின்றனர். தஞ்சை மாவட்டத்தில் 611 அங்கன்வாடி பணியாளர் பணியிடங்களும், 635 உதவியாளர் பணியிடங்களும் என மொத்தம் 1,246 பணியிடங்கள் காலியாக உள்ளன.

இந்த பணியிடங்களை நிரப்ப கடந்த ஆண்டு ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் நேர்காணல் நடத்தப்பட்டது. நேர்காணல் நடைபெற்று பல மாதங்கள் ஆன பின்னரும் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. எனவே நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அங்கன்வாடி பணியாளர், உதவியாளருக்கு பணி நியமன ஆணை வழங்க வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதே கோரிக்கையை வலியுறுத்தி 1,749 அங்கன்வாடி மையங்களையும் பூட்டிவிட்டு அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் ஒட்டுமொத்த தற்செயல்விடுப்பு எடுத்தனர். மேலும் கூடுதல் பொறுப்பு வகித்து வரும் 700 மையங்களின் சாவிகளை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைப்பதற்காக கலெக்டர் அலுவலக வளாகத்தில் அங்கன்வாடி பணியாளர்களும், உதவியாளர்களும் அமர்ந்து இருந்தனர்.

இந்தநிலையில் வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் கலெக்டர் அலுவலகத்தில் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கன்வாடி பணியாளர்களில் 32 பேரை அழைத்து மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மந்திராசலம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதில் வருகிற 1-ந் தேதி முதல் காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதை ஏற்று அங்கன்வாடி மையங்களின் சாவிகளை ஒப்படைக்கும்போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்துவிட்டு அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

Next Story