பி.டி.ஆர்.–தந்தை பெரியார் வாய்க்காலில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும், கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை
பி.டி.ஆர்.–தந்தை பெரியார் வாய்க்காலில் பாசனத்துக்கு உடனே தண்ணீர் திறக்க வேண்டும் என்று கலெக்டரிடம் விவசாயிகள் மனு அளித்தனர்.
தேனி,
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார். இக்கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள், விவசாயிகள் மனுக்கள் அளித்தனர்.
இதில், பி.டி.ஆர்.–தந்தை பெரியார் வாய்க்கால் பாசன பகுதியை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் கலெக்டரிடம் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில், ‘முல்லைப்பெரியாறு அணை, வைகை அணை ஆகிய இரு அணைகளிலும் சேர்த்து மொத்தம் 8 ஆயிரம் மில்லியன் கன அடிக்கு மேல் தண்ணீர் உள்ளது. எனவே பி.டி.ஆர்.–தந்தை பெரியார் வாய்க்காலில் பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விட வேண்டும். இந்த வாய்க்கால் தண்ணீரை நம்பி ஒவ்வொரு ஆண்டும் விவசாயம் செய்து ஒரு போகம் எடுப்பதற்கு கூட முழுமையாக 120 நாட்கள் தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, இந்த வாய்க்காலில் பாசனத்துக்கு உடனே தண்ணீர் திறக்க வேண்டும். மேலும், இந்த வாய்க்கால் மூலம் பாசனம் பெறும் நிலங்களுக்கு 2 போகத்துக்கு தண்ணீர் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.
கூட்டத்தில், ஆண்டிப்பட்டி அருகே உள்ள மேக்கிழார்பட்டி, ஆவாரம்பட்டி, பாலக்கோம்பை, தெப்பம்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள், கலெக்டரிடம் அளித்த மனுவில், ‘எங்கள் 4 கிராமங்களை சேர்ந்த வீடு இல்லாத மக்களுக்கு மேக்கிழார்பட்டியில் கடந்த 2002–ம் ஆண்டு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. இதற்கு ஒதுக்கப்பட்ட இடத்தை அளவீடு செய்து இன்னும் பயனாளிகளுக்கு வழங்கப்படவில்லை. இந்த பணிகளுக்கு சிலர் இடையூறு ஏற்படுத்தியும், அதிகாரிகளுக்கு தவறான தகவல்கள் கொடுத்தும் முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுத்து விரைவில் நிலத்தை அளந்து பயனாளிகளுக்கு வழங்க வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.
பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் கலெக்டர் அலுவலகம் வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். இதையடுத்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்களில் சிலர் மாவட்ட கலெக்டரிடம் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில், ‘டி.கள்ளிப்பட்டி வெங்கடாசலபுரத்தில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் விவசாயம் மற்றும் அன்றாட கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம். இந்த பகுதியில் சில வாலிபர்கள் சமீபகாலமாக நாங்கள் வசித்து வரும் பகுதியில் மது குடித்துவிட்டு தகராறு செய்வதும், கத்தியை காட்டி பணம் பறித்துச் செல்வதுமாக உள்ளனர். மேலும், அருகில் உள்ள ராஜவாய்க்கால் கரை பகுதியை கஞ்சா, மது போன்றவை உபயோகிக்கும் இடமாகவும் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பெண்கள் பள்ளிக்கு செல்லவோ, வேலைக்கு செல்லவோ அச்சம் அடைந்துள்ளனர். எனவே, இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.
தேனி அருகே உள்ள நாகலாபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் சார்பில் அளித்த மனுவில், ‘நாகலாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொது குடிநீர் குழாயில் இருந்து சிலர் தங்களின் வீடுகளுக்கு மின் மோட்டார் மூலம் தண்ணீர் எடுக்கின்றனர். இதனால், பொது குழாயை நம்பி இருக்கும் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் கம்பம் நகர தலைவர் ஹக்கீம்சேட் மற்றும் நிர்வாகிகள், கலெக்டரிடம் அளித்த மனுவில், ‘உத்தமபாளையத்தில் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக்கோரி ஏற்கனவே மனு அளித்து இருந்தோம். அதன்பேரில் அந்த கடையை அகற்ற கலெக்டர் உத்தரவிட்டு இருந்தார். ஆனால் கடை இன்னும் அகற்றப்படவில்லை. எனவே மக்களின் பாதுகாப்பு கருதி அந்த மதுக்கடையை அகற்ற வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.
பா.ம.க. இளைஞரணி மாநில துணை செயலாளர் திருப்பதி அளித்த மனுவில், ‘பெரியகுளம் பகுதியில் மா விவசாயம் அதிக அளவில் நடந்து வருகிறது. இந்த ஆண்டு விளைச்சல் குறைந்துள்ளது. விலையும் குறைவாகவே உள்ளது. மாம்பழம் பெரிதும் வியாபாரம் ஆகும் கேரள மாநில பகுதியில் நிபா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக வியாபாரம் இல்லாமல் போனது. இதனால் மா விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளை கணக்கெடுத்து நிவாரணம் வழங்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளிப்பதற்காக இந்து எழுச்சி முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள் கழுத்தில் வேப்பிலை மாலை அணிந்தும், கஞ்சி கலயம் சுமந்தும் வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அம்மன் கோவில்களில் ஆடி மாத கூழ் காய்ச்சி வழிபாடு நடத்துவதற்காக அரசு இலவசமாக தானியங்கள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.