மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் நினைவு தினம்: நெல்லை தாமிரபரணி ஆற்றில் அரசியல் கட்சியினர் அஞ்சலி
மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் நினைவு தினத்தையொட்டி நேற்று நெல்லை தாமிரபரணி ஆற்றில் அரசியல் கட்சியினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
நெல்லை,
மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் நினைவு தினத்தையொட்டி நேற்று நெல்லை தாமிரபரணி ஆற்றில் அரசியல் கட்சியினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
நினைவு தினம்
நெல்லையில் கடந்த 1999-ம் ஆண்டு ஜூலை மாதம் 23-ந் தேதி ஊதிய உயர்வு கேட்டு மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்றனர். அப்போது போலீசார் தடியடி நடத்தியதில் கூட்டம் சிதறி ஓடியது. இதில் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 17 பேர் உயிரிழந்தனர்.
இதன் நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. நெல்லை கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றில் பல்வேறு அரசியல் கட்சியினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
காங்கிரஸ்-பா.ஜனதா
காங்கிரஸ் கட்சி சார்பில் நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் தாமிரபரணி ஆற்றுக்கு ஊர்வலமாக சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் எஸ்.கே.எம்.சிவகுமார், முன்னாள் எம்.பி. ராமசுப்பு, மேற்கு மாவட்ட பொருளாளர் முரளிராஜா, மண்டல தலைவர் தனசிங் பாண்டியன், மாவட்ட பொதுச் செயலாளர் சொக்கலிங்ககுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பாரதீய ஜனதா கட்சி சார்பில் மாநில ஊடக பிரிவு செயலாளர் பிரசாத் தலைமையில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் விவசாய அணி மாநில பொதுச் செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன், மாநில துணைத்தலைவர் முருகதாஸ், நெல்லை மாவட்ட தலைவர் தயாசங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
புதிய தமிழகம்
புதிய தமிழகம் கட்சியினர் நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு திரண்டனர். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக த.மு.ரோடு, மதுரை ரோடு, சந்திப்பு பஸ் நிலையம் வழியாக அண்ணா சிலை அருகில் வந்தனர். அங்கிருந்து முக்கிய நிர்வாகிகள் மட்டும் கார்களில் தாமிரபரணி ஆற்றுக்கு சென்றனர். அங்கு மலர் வளையம் வைத்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். டாக்டர் கிருஷ்ணசாமியுடன் வந்த அனைவரையும் ஆற்றுக்குள் செல்ல போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதனால் போலீசாருக்கும், புதிய தமிழகம் கட்சியினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசாரை கண்டித்து அவர்கள் கோஷம் எழுப்பினார்கள். இதையடுத்து கிருஷ்ணசாமி வந்து போலீசாரிடம் கேட்டுக்கொண்டதன் பேரில் முக்கிய நிர்வாகிகள் செல்ல போலீசார் அனுமதி அளித்தனர்.
இதில் நெல்லை மாவட்ட செயலாளர்கள் தங்கராமகிருஷ்ணன் (மத்திய மாவட்டம்), நடராஜன் (கிழக்கு), இன்பராஜ் (மேற்கு), சிவகுமார் (வடக்கு), சுப்பிரமணியன் (தெற்கு) மற்றும் முன்னாள் மாவட்ட செயலாளர் செல்லப்பா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
த.ம.மு.க.
தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாநில துணை பொதுச் செயலாளர் நெல்லையப்பன் தலைமையில் வண்ணார்பேட்டை ரவுண்டானாவில் இருந்து ஊர்வலமாக வந்து தாமிரபரணி ஆற்றில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். மாநில செய்தி தொடர்பாளர் சண்முக சுதாகர், நெல்லை மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் தொழிற்சங்க தலைவர் பாலையா டேனியல், செயலாளர் மகேந்திரன், மாவட்ட செயலாளர்கள் செல்வம், தேவப்பிரியன், சத்தியமூர்த்தி, ராஜேசுவர பாண்டியன், சுப்புராஜ், செல்வக்குமார், பாலமுருகன், மாடசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொல்.திருமாவளவன்
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தொல்.திருமாவளவன் தலைமையில் வண்ணார்பேட்டையில் இருந்து ஊர்வலமாக அந்த கட்சியினர் வந்தனர். அவர்கள் தாமிரபரணி ஆற்றில் மலர் வளையம் வைத்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். ஊர்வலமாக 10-க்கும் மேற்பட்டவர்கள் செல்ல போலீசார் தடை விதித்ததால், போலீசாருக்கும் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
மாநில துணை பொதுச் செயலாளர்கள் வன்னியரசு, கனியமுதன், மாநில அமைப்பு செயலாளர் ஆற்றலரசு, மாவட்ட செயலாளர்கள் கரிசல் சுரேஷ், சுந்தர், டேனி அருள், சண்முகசுந்தரம், முன்னாள் மாவட்ட செயலாளர் செல்லத்துரை, மகளிர் அணி துணை செயலாளர் அமுதா மதியழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் தொல்.திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்தவர்களுக்கு ஆண்டு தோறும் அரசியல் கட்சியினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த ஆண்டு போலீஸ் கெடுபிடி அதிகமாக உள்ளது. இது ஜனநாயக உரிமையை பறிப்பதாக உள்ளது. உயிரிழந்த 17 பேருக்கு நினைவு தூண் அமைக்க வேண்டும். இல்லை என்றால் நினைவிடம் அமைக்க இடம் ஒதுக்க வேண்டும்.
முதல்-அமைச்சருக்கு எதிராக வருமான வரி சோதனை நடத்தப்பட்டு உள்ளது. ஆனால் அவர்களே நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் மத்திய அரசுக்கு ஆதரவாக வாக்களித்து உள்ளனர்.
தமிழக அரசை மத்திய அரசு இயக்குகிறது. மாநில உரிமைகள், தலித், சிறுபான்மையினர் உரிமைகளை பறிக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் மதசார்பற்ற கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் இணைந்திருக்கும். காங்கிரஸ், இடது சாரிகள் ஒருங்கிணைந்து இந்த மதசார்பற்ற கூட்டணியை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
த.மா.கா.-நாம் தமிழர் கட்சி
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் நெல்லை மத்திய மாவட்ட தலைவர் சுத்தமல்லி முருகேசன் தலைமையில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் வர்த்தக அணி மாவட்ட தலைவர் சக்சஸ் புன்னகை, மாநில செயலாளர்கள் சரவணன், சிந்தா சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் பாஸ்கரன், முன்னாள் மாவட்ட செயலாளர் பழனி ஆகியோர் தலைமையிலும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாவட்ட துணை செயலாளர் லட்சுமணன் தலைமையிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட பொருளாளர் சுப்பையா தலைமையிலும், பா.ம.க. சார்பில் மாநில துணைத்தலைவர் பிச்சையா பாண்டியன் தலைமையிலும், நாம் தமிழர் கட்சி சார்பில் தென்மண்டல மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் குயிலி நாச்சியார் தலைமையிலும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
பகுஜன் சமாஜ்
பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் நெல்லை மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் அஞ்சலி செலுத்தினர். ராஜ்ய மள்ளர் கட்சி நிறுவன தலைவர் கார்த்திக், மாநில செய்தி தொடர்பாளர் மகேஷ் ஆகியோர் தலைமையில் அஞ்சலி செலுத்தினர்.
மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கம் சார்பில் மாரியப்ப பாண்டியன் தலைமையிலும், மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சி மாநிலக்குழு ரமேஷ், நெல்லை மாவட்ட செயலாளர் சங்கரபாண்டியன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.
மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு மக்கள் விடுதலை கட்சி மாவட்ட செயலாளர் ராஜமாணிக்கம், இந்து மக்கள் கட்சி சார்பில் நெல்லை மாவட்ட தலைவர் உடையார், இந்திரசேனா அமைப்பின் மாநில பொது செயலாளர் முத்துப்பாண்டி, அனைத்திந்திய தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் வண்ணை முருகன், அண்ணா ரத்ததான கழக தலைவர் அய்யப்பன், தமிழ் புலிகள் கட்சி தென் மண்டல துணை செயலாளர் தமிழரசு, தலித் விடுதலை கட்சி தென்மண்டல செயலாளர் பாண்டியன், தமிழர் விடுதலை களம் மத்திய மாவட்ட செயலாளர் மணி பாண்டியன், ஆதி தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் கலைக்கண்ணன், ஆதி தமிழர் கட்சி மாநில தலைவர் முருகன், திராவிடர் தமிழர் கட்சி கருமுகிலன், தேவேந்திர குல மக்கள் இயக்க நிறுவன தலைவர் ராஜ்குமார், ஜம்மு-காஷ்மீர் நேஷனல் பேந்தர்ஸ் ஜம்மு காஷ்மீர் கட்சி மாவட்ட தலைவர் பாக்கியம் முத்து உள்ளிட்டோர் மலர் தூவினர்.
போக்குவரத்து மாற்றம்
நெல்லை மாநகராட்சி எஸ்.சி., எஸ்.டி. பணியாளர்கள் நலச்சங்க செயலாளர் சின்னத்துரை, தமிழ்நாடு மின்வாரிய டாக்டர் அம்பேத்கர் சங்க திட்ட செயலாளர் ஆதினன், ரெயில்வே எஸ்.சி., எஸ்.டி. பணியாளர்கள் சங்கம் சுரேஷ்குமார், மத்திய மாநில எஸ்.சி., எஸ்.டி. அரசு ஊழியர்கள் நலச்சங்க மாவட்ட தலைவர் சுந்தரம், மத்திய மாநில எஸ்.சி, எஸ்.டி. அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் சிவகுமார் மற்றும் பல்வேறு அமைப்பினர் அஞ்சலி செலுத்தினர்.
புதிய தமிழகம் கட்சியினர் நெல்லை சந்திப்பில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு சென்றதால் மதியம் போக்குவரத்து மாற்றப்பட்டு இருந்தது. நெல்லை சந்திப்பில் இருந்து வண்ணார்பேட்டைக்கு சென்ற வாகனங்கள் உடையார்பட்டி, வடக்கு புறவழிச்சாலை வழியாக திருப்பி விடப்பட்டன.
மாலையில் அண்ணா சாலை முதல் வண்ணார்பேட்டை மேம்பாலம் வரை இரு மார்க்கத்திலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதையொட்டி மதுரை ரோடு, புறவழிச்சாலை பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதனால் பள்ளிக்கூட மாணவ-மாணவிகள் வீடு திரும்புவதற்கு மிகவும் சிரமப்பட்டனர். கலெக்டர் அலுவலக ஊழியர்கள் வண்ணார்பேட்டை, சந்திப்பு பகுதிகளுக்கு நடந்து சென்றனர்.
நெல்லை சந்திப்பு, கொக்கிரகுளம், வண்ணார்பேட்டை பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story