5–வது நாளாக லாரிகள் வேலை நிறுத்தம் நெல்லையில் பரிதவிக்கும் வெளியூர் டிரைவர்கள்
நெல்லை மாவட்டத்தில் 5–வது நாளாக லாரிகள் வேலை நிறுத்தம் நீடிப்பதால் நெல்லைக்கு வந்த வெளியூர் டிரைவர்கள் தவித்து வருகிறார்கள்.
நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் 5–வது நாளாக லாரிகள் வேலை நிறுத்தம் நீடிப்பதால் நெல்லைக்கு வந்த வெளியூர் டிரைவர்கள் தவித்து வருகிறார்கள்.
வேலை நிறுத்தம்அகில இந்திய அளவில் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் இறங்கி உள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும். அதனை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வரவேண்டும். எண்ணெய் நிறுவனங்கள் தினமும் விலை மாற்றத்தை அறிவிப்பதை கைவிட்டு குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே விலை மாற்றத்தை அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நேற்று 5–வது நாளாக லாரிகள் வேலை நிறுத்தம் நீடித்தது. இதனால் நெல்லை மாவட்டத்தில் பெரும்பாலான லாரிகள் ஓடவில்லை. இந்த தொடர் வேலை நிறுத்தத்தால் காய்கறிகள் விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது.
காய்கறிகள் விலை உயர்வுநெல்லை நயினார்குளம் காய்கறி மொத்த மார்க்கெட்டுக்கு வெளியூர்களில் இருந்து ஒருசில லாரிகளில் மட்டுமே காய்கறிகள் நேற்று கொண்டு வரப்பட்டன. அதுதவிர உருளைக்கிழங்கு மற்றும் பல்லாரி ஆகியவை ஆந்திரா, மராட்டியத்தில் இருந்து சில லாரிகளில் கொண்டு வரப்பட்டு லாரியுடன் நயினார்குளம் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
இதனால் காய்கறிகளின் விலை நேற்று உயர்ந்து காணப்பட்டது. கேரட் விலை நேற்று ஒரு கிலோ ரூ.70–ஐ தொட்டது. பீன்ஸ் ரூ.75, ஒட்டன்சத்திரம் பீன்ஸ் ரூ.100, வெண்டைக்காய் ரூ.28 ஆக உயர்ந்தது. இதுதவிர சின்ன வெங்காயம் ரூ.70, உருளைக்கிழங்கு மற்றும் பல்லாரி மொத்த விலைக்கு ரூ.20ல் இருந்து ரூ.30 ஆகவும் உயர்ந்துள்ளது.
ஒருசில லாரிகளில் கூடுதல் வாடகை செலுத்தி காய்கறிகள் கொண்டு வரப்படுவதாலும், தட்டுப்பாடு காரணமாகவும் விலை உயர்ந்து உள்ளது. வேலை நிறுத்தம் நீடித்தால் மேலும் விலை உயர வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் கூறினர்.
பரிதவிக்கும் டிரைவர்கள்மராட்டியம், கர்நாடகம், ஆந்திரா போன்ற ஊர்களில் இருந்து சரக்கு கொண்டு வந்த லாரிகள் தற்போது நயினார்குளம் கரையில் தொடர்ந்து 5 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. அவை இங்குள்ள காய்கறி அல்லது மாற்று பொருட்களை ஏற்றிக் கொண்டு அந்தந்த மாநிலங்களுக்கு செல்லும். ஆனால் வேலை நிறுத்தம் காரணமாக அந்த லாரிகளுக்கு ‘லோடு’ கிடைக்கவில்லை. எனவே லாரி டிரைவர்கள் தங்களது லாரிகள் முன்பு ஸ்டவ் அடுப்புகள் மூலம் உணவு தயாரித்து சாப்பிட்டு காத்துக் கிடக்கின்றனர். தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் அவர்கள் பரிதவித்து வருகின்றனர்.