குலசேகரபட்டினம் அருகே கார் டிரைவர் மர்மச்சாவில் திடீர் திருப்பம் கொலை செய்யப்பட்டது அம்பலம்; கைதான சின்ன மாமியார் பரபரப்பு வாக்குமூலம்
குலசேகரன்பட்டினம் அருகே கார் டிரைவர் மர்மச்சாவில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவர் கழுத்தை கயிற்றால் இறுக்கி கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
குலசேகரன்பட்டினம்,
குலசேகரன்பட்டினம் அருகே கார் டிரைவர் மர்மச்சாவில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவர் கழுத்தை கயிற்றால் இறுக்கி கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக கைதான சின்ன மாமியார் பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளார்.
மர்மச்சாவு
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அருகே சிறுநாடார்குடியிருப்பை சேர்ந்த நாராயண பெருமாள் மகன் மகா செல்வன் (வயது 35). வாடகை கார் டிரைவரான இவர் வேலை இல்லாத நாட்களில் கூலி வேலைக்கு சென்று வந்தார்.
இவருடைய மனைவி கவிதா (33). கால்கள் ஊனமான மாற்றுத்திறனாளியான இவரை மகா செல்வன் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜெயஸ்ரீ (6) என்ற மகளும், கவின்ராஜ் (1) என்ற மகனும் உள்ளனர்.
கடந்த 19–ந்தேதி இரவில் தனது வீட்டின் முற்றத்தில் படுத்து தூங்கிய அவர் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். அவரது கழுத்தில் கயிற்றால் இறுக்கிய தடம் இருந்தது. இதுகுறித்து குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மாமியார் கைது
இந்த நிலையில் மகா செல்வனின் கழுத்தில் கயிற்றால் இறுக்கி கொலை செய்ததாக, கவிதாவின் சித்தியான(சின்ன மாமியார்) அதே ஊரைச் சேர்ந்த முருகன் மனைவி முத்துகிளி (45) குலசேகரன்பட்டினம் கிராம நிர்வாக அலுவலர் சரவணனிடம் சரண் அடைந்தார். இதையடுத்து அவரிடம் குலசேகரன்பட்டினம் போலீசார் விசாரணை நடத்தினர்
அப்போது அவர் போலீசாரிடம் அளித்த பரபரப்பு வாக்குமூலத்தில் கூறியதாவது:–
கணவரை பிரிந்து...
கவிதாவின் தாய் வேலுமுத்து என்னுடைய அக்காள் ஆவார். வேலுமுத்து தன்னுடைய கணவருடன் நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே மருதநாச்சியார்விளையில் வசித்தார். நான் என்னுடைய கணவரை விட்டு பிரிந்து, கடந்த 14 ஆண்டுகளாக தனியாக வசித்து வருகிறேன். எனக்கு குழந்தை இல்லை. வேலுமுத்துவும், அவருடைய கணவரும் இறந்து விட்டனர். எனவே அவர்களுடைய மகள் கவிதா மற்றும் மகன்கள் 2 பேரையும் என்னுடைய குழந்தைகளாக வளர்த்து வருகிறேன்.
இந்த நிலையில் பக்கத்து ஊரான தாண்டவன்காட்டைச் சேர்ந்த மகா செல்வன், கவிதாவை காதலித்து திருமணம் செய்தார். அவர்கள் எனது வீட்டின் அருகில் உள்ள வீட்டில் வசித்தனர். பின்னர் மகா செல்வன் சரியாக வேலைக்கு செல்லாமல், அடிக்கடி மது குடித்து விட்டு, கவிதாவிடம் தகராறு செய்தார். மேலும் அவர் தன்னுடைய குழந்தைகளை தனக்கு பிறக்கவில்லை என்று கூறியும் கவிதாவை கொடுமைப்படுத்தினார்.
உல்லாசத்துக்கு அழைத்து....
கடந்த 19–ந்தேதி இரவில் அவர் மது குடித்து விட்டு, என்னுடைய வீட்டுக்கு வந்து, உல்லாசத்துக்கு வருமாறு அழைத்து தொந்தரவு செய்தார். இதற்கு நான் மறுப்பு தெரிவித்தேன். இதனால் அவர் என்னை அவதூறாக பேசி தாக்கினார். பின்னர் அவர் தனது வீட்டின் முற்றத்தில் படுத்து தூங்கினார்.
இதனால் ஆத்திரம் அடைந்த நான் நள்ளிரவில் எனது வீட்டில் இருந்த நைலான் கயிற்றை எடுத்து சென்று, அவருடைய கழுத்தை இறுக்கி கொலை செய்தேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார். இதை தொடர்ந்து முத்துக்கிளியை போலீசார் கைது செய்தனர். கொலைக்கு பயன்படுத்திய நைலான் கயிற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை திருச்செந்தூர் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி, நெல்லை கொக்கிரகுளம் மகளிர் சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story