செல்போன் கடை உரிமையாளரிடம் நூதன முறையில் ரூ.28 லட்சம் மோசடி கோவையை சேர்ந்தவர் கைது


செல்போன் கடை உரிமையாளரிடம் நூதன முறையில் ரூ.28 லட்சம் மோசடி கோவையை சேர்ந்தவர் கைது
x
தினத்தந்தி 25 July 2018 4:30 AM IST (Updated: 24 July 2018 10:01 PM IST)
t-max-icont-min-icon

திருவாரூரில், செல்போன் கடை உரிமையாளரிடம் நூதன முறையில் ரூ.28 லட்சம் மோசடி செய்த கோவையை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர்,

திருவாரூர் தெற்கு வீதியில் ஷாப்பிங் சென்டர் நடத்தி வருபவர் அக்பர் அலி (வயது 41). இவருடைய கடையில் வீட்டு உபயோக பொருட்கள், மளிகை பொருட்கள் மற்றும் செல்போன் விற்பனை செய்து வருகிறார்.

அக்பர் அலி, திருவாரூர் குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:–

கடந்த 2017–ம் ஆண்டு மே மாதம் 10–ந் தேதி எனது கடைக்கு கோவை பீளமேடு பாரதி காலனியில் ‘கேஷ்பேக் இ–மார்க்கெட்’ என்னும் ‘அஜந்தா இ வேல்ட்’ நிறுவனத்தை நடத்தி வரும் அருண்தீபக், அவருடைய தம்பி பிரகலாதன், நிறுவனத்தின் மண்டல அலுவலர் மைக்கேல் மற்றும் திருவாரூர் குமரக்கோவில் தெருவை சேர்ந்த தியாகராஜன் ஆகிய 4 பேரும் வந்தனர்.

அவர்கள் என்னிடம், உங்கள் கடையில் விற்பனை செய்யப்படும் பொருட்களுக்கு கேஷ் பேக் சலுகை வழங்கலாம். இதற்கு விற்பனை செய்யப்படும் பொருட்களுக்கு ரூ.100–க்கு 15 சதவீதமும், அதற்கான வரி 18 சதவீதமும் சேர்த்து எங்கள் நிறுவனத்தில் வரவு வைத்தால் 90 நாட்கள் கழித்து 100 சதவீதம் பணத்தை திரும்ப பெறலாம் என கூறினர்.

இதனை நம்பி கடந்த 2017–ம் ஆண்டு ஜூன் மாதம் 1–ந் தேதி முதல் ஆகஸ்டு மாதம் 23–ந் தேதி வரையில் விற்பனை செய்யப்பட்ட செல்போன், மளிகை பொருட்களில் விலையில் 15 சதவீதம், வரியுடன் கணக்கீட்டு ரூ.28 லட்சம் பணத்தை கோவை ‘இ வேல்ட் பிரவேட் லிமிடெட்’ நிறுவத்தின் வங்கி கணக்கில் பணத்தை கட்டினேன்.

ஆனால் 90 நாட்கள் கழித்து அவர்கள் கூறியபடி பணத்தை திருப்பி தரவில்லை. இதனால் கொடுத்த ரூ.28 லட்சம் பணத்தை திரும்பி கேட்டபோது தர மறுத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இவ்வாறு அவர் அந்த புகாரில் கூறியிருந்தார்.

இதுகுறித்து திருவாரூர் குற்றப்பிரிவு போலீசார், அருண்தீபக், பிரகலாதன், மைகேல், தியாகராஜன் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் நேற்று கோவையை சேர்ந்த பிரகலாதனை போலீசார் கைது செய்தனர்.


Next Story