லாரிகள் தொடர் வேலைநிறுத்தம்: சென்னை யானைகவுனியில் பார்சல் அலுவலகங்கள் முடங்கின
லாரிகள் தொடர் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக யானைகவுனியில் பார்சல் அலுவலகங்கள் முடங்கின. இதனால் சுமைதூக்கும் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
சென்னை,
ஜி.எஸ்.டி. வரம்புக்குள் பெட்ரோல்–டீசல் விலையை கொண்டு வர வேண்டும். சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே சுங்கக்கட்டணம் வசூலிக்க வேண்டும். 3–ம் நபர் காப்பீடு கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் கடந்த 20–ந்தேதி முதல் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி நேற்று 5–வது நாளாக போராட்டம் நீடித்தது.
நாடு முழுவதும் அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரசில் அங்கம் வகிக்கும் 75 லட்சம் லாரிகளும், தமிழகத்தில் 4.5 லட்சம் லாரிகளும் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் சரக்கு சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் யானைகவுனி, வால்டாக்ஸ் சாலை, சவுகார்பேட்டை பகுதிகளில் அதிகமான பார்சல் அலுவலகங்கள் இயங்குகின்றன. இங்கு காய்கறி, பழங்கள் போன்ற அழுகும் பொருட்களை தவிர பிற பொருட்கள் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.
தற்போது லாரிகள் தொடர் வேலைநிறுத்தம் காரணமாக பெரும்பாலான அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. ஒரு சில அலுவலகங்கள் சரக்குகள் இல்லாமல் வெறிச்சோடியும், சில அலுவலகங்களில் பொருட்கள் பெருமளவில் தேக்கமும் அடைந்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வால்டாக்ஸ் சாலை பார்சல் புக்கிங் லாரி உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் தலைவர் குணசேகரன் கூறியதாவது:–
நாடு முழுவதும் நடைபெறும் வேலைநிறுத்த போராட்டத்துக்கு எங்களுடைய சங்கம் முழு ஆதரவு அளித்துள்ளது. எங்கள் சங்கத்தின் சார்பில் 306 லாரி புக்கிங் பார்சல் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
தற்போது தொடர் வேலைநிறுத்தம் காரணமாக சரக்குகள் ஏற்றுமதி, இறக்குமதி தடைப்பட்டுள்ளதால், பார்சல் அலுவலகங்கள் முடங்கி உள்ளது. இதன் காரணமாக பார்சல் அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள், சுமைதூக்கும் தொழிலாளர்கள், மாட்டு வண்டி, தட்டு ரிக்ஷா தொழிலாளர்கள் என 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை இழந்துள்ளனர். அரசுக்கும் தினசரி ரூ.150 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
லாரிகளில் பார்சல் எடுத்து செல்லப்படாததால், ஆம்னி பஸ்களில் முறைகேடாக ரசீது எதுவும் இல்லாமல் பார்சல்கள் எடுத்து செல்லப்படுகிறது. இவ்வாறு நடைபெறும் வரி ஏய்ப்பால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
பார்சல் அலுவலகங்களில் தங்கி வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு உணவு போன்ற வசதிகள் கிடைத்துள்ளன. தினக்கூலியாக வேலை பார்க்கும் சுமைதூக்கும் தொழிலாளர்கள் வேலை இல்லாமல் பரிதவிப்புக்குள்ளாகி உள்ளனர். அவர்களுடைய வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story