வாலிபர் சாவில் மர்மம் போலீசார் மீது நடவடிக்கை கோரி உறவினர்கள் போராட்டம்
வாலிபர் சாவில் மர்மம் இருப்பதாக கூறி போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்துள்ள மல்லி போலீஸ் சரகத்தை சேர்ந்தது எஸ்.புதுப்பட்டி கிராமம். இந்த ஊரை சேர்ந்தவர் முனியாண்டி இவரது மகன் பெரியசாமி( வயது 23). இவர் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது பிணத்தின் அருகே ஒரு கடிதம் கிடந்தது. இந்த கடிதத்தில் இருசக்கர வாகனத்தில் வரும்போது சிவகாசி போக்குவரத்து பிரிவு சப்–இன்ஸ்பெக்டர் மகேந்திரன் என்பவர் பிடித்து தரக்குறைவாக பேசியதாகவும் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த கடிதத்துடன் சிவகாசி நகர் சப்–இன்ஸ்பெக்டர் ராமநாதன் கையெழுத்திட்ட சார்சீட்டும் இருந்தது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெரியசாமி உடலை சிவகாசி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பெரியசாமியின் தாயார் தங்கபுஷ்பம் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் மூக்கன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். பிரேத பரிசோதனை முடிந்தவுடன் அவரது உறவினர்கள், போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர். 1 1/2 மணி நேரம் போராட்டம் நீடித்தது. அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது.