சொத்துவரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி மக்களை திரட்டி மனு கொடுக்கும் போராட்டம், இந்திய கம்யூனிஸ்டு அறிவிப்பு
சொத்துவரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி திருப்பூர் மாவட்டத்தில் மக்களை திரட்டி மனு கொடுக்கும் போராட்டம் நடத்தப்படும் என இந்திய கம்யூனிஸ்டு அறிவித்துள்ளது.
திருப்பூர்,
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் திருப்பூர் மாவட்ட செயலாளர் ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பலமடங்கு வரியை உயர்த்தி வசூல் செய்தது. உடனே இதை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது. அதன்காரணமாக சொத்து வரி உயர்த்தியதை நிறுத்தி வைப்பதாகவும், நோட்டீஸ் அனுப்பியதை திரும்ப பெற்றுக்கொள்வதாகவும், உயர்த்திய வரியை யாரும் கட்ட வேண்டாம் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் அறிவித்தனர். தற்போது வரி உயர்வு சம்பந்தமாக கோர்ட்டு கேட்டுள்ள விளக்கத்தை பயன்படுத்தி தமிழக அரசு சொத்துவரியை 100 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. குடிநீர் வரியையும் உயர்த்த உள்ளது. இதை இந்திய கம்யூனிஸ்டு கட்சி வன்மையாக கண்டிக்கிறது. உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் மத்திய அரசின் நிதி உள்பட பல்வேறு நிதிகள் சுமார் ரூ.3,500 கோடிக்கு மேல் கிடப்பில் உள்ளது. இதனால் உள்ளாட்சி அமைப்புகள் மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றவில்லை. இந்தநிலையில் சொத்துவரியை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. எனவே வரி உயர்வு உத்தரவை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி அடுத்த மாதம்(ஆகஸ்டு) 6–ந் தேதி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சி அலுவலகங்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் மக்களை திரட்டி மனு கொடுக்கும் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.