5–வது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம்: ரூ.500 கோடிக்கு வர்த்தகம் பாதிப்பு


5–வது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம்: ரூ.500 கோடிக்கு வர்த்தகம் பாதிப்பு
x
தினத்தந்தி 25 July 2018 4:15 AM IST (Updated: 25 July 2018 1:23 AM IST)
t-max-icont-min-icon

5–வது நாளாக லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் நடந்ததால் திருப்பூர் மாவட்டத்தில் ரூ.500 கோடிக்கு வர்த்தக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

திருப்பூர்,

பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வர வேண்டும். சுங்கச்சாவடிகளை அகற்றி விட்டு ஆண்டுக்கு ஒருமுறை சுங்கக்கட்டணம் வசூலிக்க வேண்டும். 3–ம் நபர் காப்பீடு கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம்(தமிழ்நாடு) சார்பில் தமிழகத்தில் லாரிகள் வேலைநிறுத்தம் நடக்கிறது.

இந்த போராட்டத்துக்கு திருப்பூர் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதன்காரணமாக மாவட்டத்தில் 8 ஆயிரம் லாரிகள், 8 ஆயிரம் சிறிய லாரிகள் ஓடவில்லை. திருப்பூரில் இருந்து பின்னலாடைகள், பல்லடத்தில் இருந்து கறிக்கோழிகள், அவினாசி, பல்லடம் பகுதியில் இருந்து காடா துணிகள், காங்கேயம் பகுதியில் இருந்து தேங்காய் எண்ணெய், தாராபுரம் பகுதியில் இருந்து அரிசி மூடைகள் உள்ளிட்டவை வெளிமாவட்டம், வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்க முடியாமல் சரக்குகள் தேங்கிக்கிடக்கின்றன. இதன்காரணமாக நாளொன்றுக்கு ரூ.100 கோடி மதிப்புள்ள வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. 5–வது நாளாக நேற்றும் லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் தொடர்ந்ததால் ரூ.500 கோடிக்கு வர்த்தக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழப்பை சந்தித்துள்ளனர்.

ஆந்திராவில் இருந்து திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு 2,400 டன் எடையுள்ள சிமெண்டு மூடைகள் 42 பெட்டிகள் கொண்ட சரக்கு ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. கடந்த 20–ந் தேதி திருப்பூர் கூட்ஷெட்டுக்கு அந்த சரக்கு ரெயில் வந்தது. ஆனால் லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக சரக்குகளை ரெயிலில் இருந்து இறக்குவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்தநிலையில் நேற்று காலை தனியார் நிறுவனத்தின் தரப்பில் இருந்து லாரிகள் கொண்டு வரப்பட்டு ரெயிலில் இருந்து சிமெண்ட் மூடைகள் ஏற்றி கொண்டு செல்லப்பட்டன. நேற்று ரெயிலில் 21 பெட்டிகளில் இருந்த சிமெண்ட் மூடைகள் எடுக்கப்பட்டுள்ளன. மீதம் உள்ள 21 பெட்டிகளில் சிமெண்ட் மூடைகள் உள்ளன. இன்று(புதன்கிழமை) அந்த மூடைகள் எடுக்கப்பட உள்ளது. சரக்கு ரெயிலில் இருந்து உரிய காலத்துக்குள் சிமெண்ட் மூடைகளை இறக்காததால் கூட்ஷெட்டுக்கு சரக்கு ரெயில் வந்த நேரத்தில் இருந்து சிமெண்ட் மூடைகளை முழுமையாக எடுக்கும் நேரம் வரை கணக்கிட்டு தனியார் நிறுவனத்திடம் இருந்து அபராதம் விதிக்கப்படும் என்று ரெயில்வே சரக்கு பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story