5–வது நாளாக லாரிகள் வேலை நிறுத்தம்: ஈரோட்டில் ரூ.30 கோடி துணிகள் தேக்கம்
5–வது நாளாக லாரிகள் வேலை நிறுத்த போராட்டம் நடப்பதால் ஈரோட்டில் ரூ.30 கோடி மதிப்பிலான துணிகள் தேக்கம் அடைந்து உள்ளது. இன்று (புதன்கிழமை) முதல் விசைத்தறியில் உற்பத்தியை நிறுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
ஈரோடு,
லாரிகள் வேலை நிறுத்தம் நாடு தழுவிய அளவில் கடந்த 20–ந் தேதி தொடங்கியது. அதன்படி ஈரோடு மாவட்டத்திலும் 5–வது நாளாக நேற்றும் லாரிகள் வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்தது. இதன்காரணமாக ஈரோடு மாவட்டத்தில் 5 ஆயிரம் லாரிகள் இயக்கப்படவில்லை. ஈரோடு பகுதியில் உள்ள லாரிகள் நரிப்பள்ளம், மூலப்பட்டறை உள்ளிட்ட இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. அங்கு டிரைவர்கள் ஓய்வு எடுத்து வருகிறார்கள். மேலும், வெளியூரை சேர்ந்த டிரைவர்கள் தங்களது வீடுகளுக்கு சென்றுவிட்டனர்.
போராட்டம் காரணமாக லாரிகள் இயக்கப்படாததால் அவசர தேவைக்கு சரக்கு ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், காய்கறிகள், அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைக்க பெரும் சிரமம் ஏற்பட்டு உள்ளது. நீண்ட தூரம் அனுப்ப வேண்டிய சரக்குகள் முழுவதும் தேக்கம் அடைந்து உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள், ஜவுளி, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் அதிகமாக வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த பொருட்கள் அனைத்தும் சரக்கு புக்கிங் அலுவலகங்களிலும், குடோன்களிலும் தேக்கி வைக்கப்பட்டு உள்ளன. இவ்வாறு சரக்குகளை அனுப்பி வைக்க முடியாத நிலை ஏற்பட்டு இருப்பதால் உற்பத்தி பாதிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. ஈரோட்டில் விசைத்தறி உற்பத்தியை இன்று (புதன்கிழமை) முதல் நிறுத்தி வைக்க விசைத்தறி உரிமையாளர்கள் முடிவு செய்து உள்ளனர்.
இதுகுறித்து ஈரோடு விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர் கூறியதாவது:–
ஈரோடு மாணிக்கம்பாளையம், வீரப்பன்சத்திரம், நாராயணவலசு மற்றும் சுற்றுவட்டார பகுதியில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த விசைத்தறிகளில் உற்பத்தி செய்யப்படும் துணிகள் பெரும்பாலும் குஜராத், மராட்டியம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்காளம் உள்பட பல்வேறு மாநிலங்களுக்கு லாரிகள் மூலமாக அனுப்பி வைக்கப்படுகிறது.
ஈரோட்டில் தினமும் ரூ.6 கோடி மதிப்பில் 20 லட்சம் மீட்டர் துணிகள் உற்பத்தி செய்யப்படும். கடந்த 5 நாட்களாக லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக ரூ.30 கோடி மதிப்பிலான துணிகள் வடமாநிலங்களுக்கு அனுப்பி வைக்க முடியாமல் தேக்கம் அடைந்து உள்ளது. மேலும், உற்பத்தி செய்யப்பட்ட துணிகள் குடோன்களில் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளது. எனவே லாரிகள் வேலை நிறுத்தம் முடியும் வரை இன்று (புதன்கிழமை) முதல் விசைத்தறி உற்பத்தியை நிறுத்தி வைக்க முடிவு செய்து உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.