கோத்தகிரி அருகே தொழிலாளியை கத்தியால் குத்திய அண்ணன்–தம்பி கைது


கோத்தகிரி அருகே தொழிலாளியை கத்தியால் குத்திய அண்ணன்–தம்பி கைது
x
தினத்தந்தி 25 July 2018 3:15 AM IST (Updated: 25 July 2018 1:23 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி அருகே தொழிலாளியை கத்தியால் குத்திய அண்ணன்–தம்பியை போலீசார் கைது செய்தனர்.

கோத்தகிரி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள தப்பக்கம்பை தாவலா பகுதியை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 40). கூலி தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் நாகேந்திரன்(28). இவரது சகோதரர் சுபாஷ்(25). இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் இருந்த உதயகுமார், நாகேந்திரனின் வீட்டின் முன்பாக நடந்து சென்றுள்ளார். அப்போது முன்விரோதம் காரணமாக 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றிய நிலையில் அங்கிருந்த சுபாசும், நாகேந்திரனுடன் சேர்ந்து உதயகுமாரை கைகளால் தாக்கியுள்ளார். மேலும் அண்ணன்–தம்பி 2 பேரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் உதயகுமாரின் முதுகில் குத்தினர். அதில் படுகாயம் அடைந்த அவர் அலறித்துடித்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகேந்திரன், சுபாஷ் ஆகியோரை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக நாகேந்திரனின் தந்தை கனகராஜ் அளித்துள்ள மற்றொரு புகாரில், குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட உதயகுமாரை தட்டி கேட்க சென்ற தனது மனைவி மற்றும் தாயாரை அவர் கீழே தள்ளிவிட்டார். அதில் அவர்கள் காயம் அடைந்தனர். எனவே உதயகுமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதன்பேரில் உதயகுமார் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Next Story