நிதிநிறுவன அதிபர் வீட்டில் 50 பவுன் நகை கொள்ளை


நிதிநிறுவன அதிபர் வீட்டில் 50 பவுன் நகை கொள்ளை
x
தினத்தந்தி 25 July 2018 3:45 AM IST (Updated: 25 July 2018 2:28 AM IST)
t-max-icont-min-icon

நிதிநிறுவன அதிபர் வீட்டில் 50 பவுன் நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை பிடிக்க 3 தனிப்படையினர் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் இந்திரா நகர் அம்பேத்கர் சாலையில் வசிப்பவர் குமரவேல். இவரது மாமியார் சரஸ்வதி (வயது 50). நேற்று முன்தினம் அதிகாலையில் சரஸ்வதி மட்டும் வீட்டில் இருந்தார். அப்போது, வீட்டுக்கு 5 பேர் வந்தனர். அவர்கள் தங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் என அறிமுகம் செய்துகொண்டனர்.

பிறகு பீரோவின் சாவியை வாங்கி கொண்ட அவர்கள், பீரோவில் இருந்த 50 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.15 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டனர். அதன்பிறகு தான் அவர்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் இல்லை என்பதும், நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றதும் தெரியவந்தது.

இந்த துணிகர கொள்ளை சம்பவம் குறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கொள்ளையர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி 3 தனிப்படை அமைத்து உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பஞ்சாட்சரம் மேற்பார்வையில், காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன், தாலுகா குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அழகேசன், காஞ்சீபுரம் தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் டீக்காரம் ஆகியோர் தலைமையிலான 3 தனிப்படையினர் மர்மநபர்களை பிடிக்க தனித்தனியாக தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.

Next Story