மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு: பள்ளிபாளையத்தில் 200 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது


மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு: பள்ளிபாளையத்தில் 200 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது
x
தினத்தந்தி 25 July 2018 4:45 AM IST (Updated: 25 July 2018 3:11 AM IST)
t-max-icont-min-icon

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டு உள்ளதால் பள்ளிபாளையத்தில் காவிரி கரையோரத்தில் உள்ள 200 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

பள்ளிபாளையம்,

5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டி உள்ளது. அணைக்கு வினாடிக்கு 75 ஆயிரத்து 170 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணை உச்சப்பட்ச நீர்மட்டத்தை எட்டி விட்டதால் அணையில் இருந்து வினாடிக்கு 75 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படு கிறது.

இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. 5 ஆண்டுகளுக்கு பிறகு காவிரி ஆற்றில் வெள்ளம் வருவதை காண, கரையோர பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கூட்டம், கூட்டமாக வந்து வேடிக்கை பார்த்து செல்கின்றனர். இதனால் கரையோர பகுதிகளில் அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் விதமாக போலீசாரும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் கரையோர பகுதிகளில் குடியிருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்குவதற்கு அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் காவிரி ஆற்றின் இருபுறமும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் பள்ளிபாளையத்தில் காவிரி கரையோரம் காலி செய்யப்பட்ட 200 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. அந்த வீடுகளில் இருந்த பொதுமக்கள் ஏற்கனவே வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்து சென்று விட்டனர். இதனால் பொதுமக்கள் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை.

பள்ளிபாளையம் பாவடி தெரு அருகில் காவிரி ஆற்றில் கட்டப்பட்டு உள்ள முனியப்பசாமி சிலையின் 13 அடி உயர பீடத்தை மூழ்கடித்தப்படி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதே போல் ஆதிகேசவ பெருமாள் கோவிலை தொட்டப்படி காவிரி வெள்ளம் செல்கிறது. கோவிலுக்குள் காவிரி நீர் புகுந்ததால் அங்கிருந்து மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணி நடந்தது.

பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தப்படி சென்றன. வெள்ளம் கரைபுரண்டு ஓடும் காவிரி ஆற்றை கரையோரத்தில் நின்று திரளான பொதுமக்கள் வேடிக்கை பார்த்தனர். காக்காத்திட்டு பாறை பகுதியில் உள்ள விநாயகர் கோவிலையும் வெள்ளம் சூழ்ந்தது.

குமாரபாளையத்தில் மணிமேகலை இந்திரா நகரில் உள்ள 5 வீடுகளுக்குள் காவிரி வெள்ளம் புகுந்தது. இதற்கிடையே ஆற்றில் வெள்ளப்பெருக்கு வருவதையொட்டி கரையோர பகுதியில் 39 வீடுகளில் வசித்த குடும்பத்தினரை மாவட்ட நிர்வாகம் அங்கிருந்து வெளியேற்றி அருகில் நகராட்சிக்கு சொந்தமான திருமண மண்டபங்களில் தங்க வைத்தனர். அவர்களுக்கு வேண்டிய உணவு வசதிகளையும் செய்து கொடுத்தனர்.

இது பற்றி அறிந்த மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார். அப்போது வெள்ளம் புகுந்த வீடுகளில் வசித்த பொதுமக்கள் கலெக்டரிடம், தாங்கள் தாழ்வான பகுதியில் வசித்து வருவதால் தான் வெள்ளம் வரும் காலங்களில் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலை உள்ளது. எனவே எங்களுக்கு மேடான பகுதிகளில் வசிப்பதற்கு இலவச வீட்டு மனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இது பற்றி நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி அளித்தார். 

Next Story