மதுபானம் ஏற்றி வந்த லாரி மோதி வாலிபர் பலி பொதுமக்கள் சாலைமறியல்


மதுபானம் ஏற்றி வந்த லாரி மோதி வாலிபர் பலி பொதுமக்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 25 July 2018 4:15 AM IST (Updated: 25 July 2018 3:26 AM IST)
t-max-icont-min-icon

சந்தூர் அருகே மது பானம் ஏற்றி வந்த லாரி மோதியதில் வாலிபர் பலியானார். இதையடுத்து அந்த பகுதியில் வேகத்தடை அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் சந்தூர் அருகே உள்ள அனகோடி கிராமத்தை சேர்ந்தவர் பரமேஸ்வரன். இவரது மகன் கார்த்திக் (வயது 19). இவர் நேற்று பிற்பகலில், மளிகை பொருட்கள் வாங்க சந்தூருக்கு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். சந்தூர் பிரிவு சாலையில் வந்த போது, அரசு மதுபானக் கடைக்கு மதுபாட்டில்கள் ஏற்றி வந்த லாரி, மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த கார்த்திக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து போச்சம்பள்ளி போலீசார் அங்கு வந்தனர். அப்போது உடலை எடுக்க விடாமல் பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சந்தூர் பிரிவு சாலையில் அடிக்கடி விபத்துகளால் உயிரிழப்புகளும், காயங்களும் ஏற்படுகிறது. இங்கு வேகத்தடை அமைக்க வேண்டும் என 20 ஆண்டுகளுக்கு மேலாக வலியுறுத்தி வருகிறோம். அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்து சென்றும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே உடனடியாக வேகத்தடை அமைக்க வேண்டும். விபத்தை ஏற்படுத்திய டிரைவரை கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள், போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த பர்கூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல், போச்சம்பள்ளி தாசில்தார் கோபிநாத் மற்றும் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி, வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதைத் தொடர்ந்து கார்த்திக்கின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக போச்சம்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர். 

Next Story