கே.ஆர்.எஸ்.-கபினி அணைகளுக்கு நீர்வரத்து குறைந்ததால் தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு குறைப்பு


கே.ஆர்.எஸ்.-கபினி அணைகளுக்கு நீர்வரத்து குறைந்ததால் தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு குறைப்பு
x
தினத்தந்தி 24 July 2018 11:27 PM GMT (Updated: 24 July 2018 11:27 PM GMT)

கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளுக்கு நீர்வரத்து குறைந்ததால் தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.

மண்டியா,

கர்நாடகத்தில் கடந்த மே மாதம் இறுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. முதலில் மாநிலம் முழுவதும் லேசாக பெய்யத்தொடங்கிய மழை பின்னர் வெளுத்து வாங்கியது. அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக கொட்டித்தீர்த்தது. இதனால் மாநிலத்தில் உள்ள அனைத்து அணைகளும் வேகமாக நிரம்பின. குறிப்பாக மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா அருகே கண்ணம்பாடியில் காவிரியின் குறுக்கே அமைந்துள்ள கே.ஆர்.எஸ்.(கிருஷ்ணராஜ சாகர்) அணையும், மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளி கிராமத்தில் கபிலா ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள கபினி அணையும் முழுகொள்ளளவை எட்டின.

இதில் கே.ஆர்.எஸ். அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளாக குடகு மாவட்டம், கேரள மாநிலத்திற்கு உட்பட்ட வயநாடு பகுதி ஆகியவை விளங்குகின்றன. வயநாடு பகுதியின் மற்றொரு புறம் கபிலா ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியாக விளங்குகிறது.

தொடர் கனமழையால் இவ்விரு அணைகளும் முழுகொள்ளளவை எட்டிவிட்டன என்றே சொல்லலாம். இதையொட்டி கடந்த 20-ந் தேதி முதல்-மந்திரி குமாரசாமி இவ்விரு அணைகளுக்கும் நேரில் சென்று சிறப்பு பூஜைகள் செய்தார். நேற்றைய நிலவரப்படி கே.ஆர்.எஸ். அணையில் 122.75 அடி தண்ணீர் இருந்தது. அணையின் மொத்த நீர்மட்ட கொள்ளளவு 124.80 அடி ஆகும். நேற்று மாலை நிலவரப்படி கே.ஆர்.எஸ். அணைக்கு வினாடிக்கு 48 ஆயிரத்து 68 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் வினாடிக்கு 51 ஆயிரத்து 38 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

அதேபோல் கபினி அணைக்கு நேற்று மாலை நிலவரப்படி வினாடிக்கு 27 ஆயிரத்து 500 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 26 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. கபினி அணையின் மொத்த நீர்மட்ட கொள்ளளவு 2,284.00 அடி(கடல் மட்டத்தில் இருந்து) ஆகும். நேற்றைய நிலவரப்படி அணையில் 2,283.04 அடி தண்ணீர் இருந்தது. மேற்கண்ட இரு அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு மொத்தம் வினாடிக்கு 77 ஆயிரத்து 38 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதாவது கபினி அணையில் இருந்து கபிலா ஆற்றில் திறந்து விடப்படும் நீர், டி.நரசிப்புரா அருகே தலக்காடு பகுதியில் காவிரியுடன் கலந்து தமிழ்நாட்டுக்கு செல்கிறது.

நேற்று முன்தினம் இவ்விரு அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு வினாடிக்கு 82 ஆயிரம் கன அடிக்கும் மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டு இருந்தது. அணைகளுக்கு தண்ணீர் வரத்து குறைந்து வருவதால், தமிழகத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளதாக அணைகளின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இருப்பினும் காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை அரசு அதிகாரிகளும், தன்னார்வலர்களும் செய்து வருகிறார்கள்.

Next Story