5–வது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு: புதுச்சேரியில் காய்கறிகள் விலை உயர்வு
லாரிகள் வேலைநிறுத்தம் 5–வது நாளாக நீடித்து வருகிறது. இதனால் புதுவையில் காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது.
புதுச்சேரி,
பெட்ரோல், டீசல் விலையை சரக்கு மற்றும் சேவை வரிக்குள் கொண்டு வர வேண்டும், சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு ஆண்டுக்கு ஒருமுறை சுங்கக்கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் நாடு முழுவதும் கடந்த 20–ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் புதுவை மாநில லாரி உரிமையாளர்களும் கலந்து கொண்டனர். இந்த போராட்டம் நேற்று 5–வது நாளாக நடந்தது.
இதனால் புதுவையில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் ஓடவில்லை. அந்த லாரிகள் புதுவை மேட்டுப்பாளையத்தில் உள்ள போக்குவரத்து நகரம் மற்றும் கோரிமேடு எல்லைப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பெங்களூரு, வேலூர், தூத்துக்குடி, மேட்டுப்பாளையம், கோயம்பேடு பகுதிகளில் இருந்து அதிக அளவில் காய்கறிகள் வருவது வழக்கம். இந்தநிலையில் புதுவையில் காய்கறி கடை வைத்திருப்பவர்கள் தங்களது சொந்த வாகனங்களில் காய்கறிகள் கொள்முதல் செய்து வருகின்றனர். இதனால் காய்கறி தட்டுப்பாடு ஏற்படவில்லை.
ஆனால் கேரட், உருளைக்கிழங்கு, பீட்ரூட், வெங்காயம் போன்ற ஒரு சில காய்கறிகளின் விலை கிலோவிற்கு ரூ.3 முதல் ரூ.5 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூ, பழங்களின் விலையும் உயர்ந்துள்ளன. அரிசி, பருப்பு மற்றும் தானிய வகைகள் வடமாநிலங்களில் இருந்து வருகின்றன. ஏற்கனவே இருப்பு வைக்கப்பட்டு இருந்த பொருட்கள் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. போராட்டம் தொடர்ந்தால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யும் பொருட்கள் தேங்கி கிடக்கின்றன. இந்த போராட்டத்தின் காரணமாக புதுவையில் நாளொன்றுக்கு ரூ.200 கோடி அளவிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.