மராத்தா போராட்டத்தில் 2-வது நாளாக வன்முறை வாகனங்களுக்கு தீவைப்பு; எம்.பி.யை தாக்க முயற்சி


மராத்தா போராட்டத்தில் 2-வது நாளாக வன்முறை வாகனங்களுக்கு தீவைப்பு; எம்.பி.யை தாக்க முயற்சி
x
தினத்தந்தி 25 July 2018 5:58 AM IST (Updated: 25 July 2018 5:58 AM IST)
t-max-icont-min-icon

மராத்தா சமுதாயத்தினர் போராட்டத்தில் நேற்று 2-வது நாளாக மாநிலம் முழுவதும் வன்முறை ஏற்பட்டது. வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டன.

சிவசேனா எம்.பி.யை தாக்க முயற்சி நடந்தது. போராட்டத்தை தீவிரப்படுத்த மும்பையில் இன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்து உள்ளனர்.

மும்பை,

மராட்டிய மக்கள் தொகையில் 30 சதவீதம் பேர் மராத்தா சமுதாயத்தினர்.

இந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள் கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கேட்டு மராட்டியம் முழுவதும் பல கட்டமாக அமைதி பேரணிகளை நடத்தினார்கள். இந்த பேரணிகளில் மராத்தா சமுதாயத்தினர் லட்சக்கணக்கில் திரண்டது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

இருப்பினும் தங்களது கோரிக்கையை நிறைவேற்ற அரசு முன்வரவில்லை என மராத்தா சமுதாயத்தினர் வேதனை அடைந்தனர்.

இந்தநிலையில், மீண்டும் தற்போது அந்த சமுதாயத்தினர் போராட்ட களத்தில் குதித்து உள்ளனர். கோரிக்கைக்காக மராத்தா சமுதாயத்தினர் நடத்தி வந்த அமைதி போராட்டம் தற்போது, வன்முறையாக மாறியுள்ளது. நேற்று முன்தினம் மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் மறியலில் ஈடுபட்டனர். அப்போது, பஸ்கள் சேதப்படுத்தப்பட்டன. ஆஷாடி ஏகாதசி திருவிழாைவயொட்டி 10 லட்சம் பக்தர்கள் திரண்ட பண்டர்பூரில் பெரியளவில் போராட்டம் நடத்துவோம் என்று கூறி, முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசின் பண்டர்பூர் பயணத்தையும் ரத்து செய்ய வைத்தனர்.

ஆகஸ்டு 9-ந்தேதி மாநிலம் தழுவிய அளவில் முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்து இருந்தனர்.

இந்தநிலையில், அவுரங்காபாத்தில் போராட்டத்தின் போது, கோரிக்கைக்காக காகாசாகேப் ஷிண்டே என்ற வாலிபர் கோதாவரி ஆற்றில் குதித்து உயிர் நீத்தார்.

இந்த சம்பவம் அவுரங்காபாத் மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் பெரும் பதற்றத்தை உண்டாக்கியது. சமுதாய கோரிக்கைக்காக போராடி உயிர் துறந்த காகாசாகேப் ஷிண்டே(வயது 27) மரணம் மராத்தா சமுதாயத்தினரின் போராட்ட தீயில் எண்ணெயை ஊற்றி மேலும் தீவிரப்படுத்தி உள்ளது.

நேற்று 2-வது நாளாக மாநிலம் முழுவதும் மராத்தா சமுதாயத்தினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். பல இடங்களில் வன்முறை வெடித்தது. மொட்டை அடித்து மாநில அரசுக்கு எதிராக எதிர்ப்பை தெரிவித்தனர். அவுரங்காபாத்தில் மராத்தா சமுதாயத்தினரின் தீவிரமான போராட்டம் காரணமாக பதற்றமான சூழல் நிலவியதை அடுத்து, அங்கு அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

இருப்பினும் அங்குள்ள கங்காபூர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மராத்தா சமுதாயத்தினர் போலீஸ் வேன், தீயணைப்பு படை வாகனம் உள்ளிட்ட 12 வாகனங்களை சூறையாடினார்கள்.

அங்குள்ள பாலத்தில் வந்த வேன் மற்றும் லாரியை சாலையில் கவிழ்த்து தீ வைத்தனர். இதன் காரணமாக அந்த பகுதியே போர்க்களம் போல் காட்சி அளித்தது.

அவர்களை தடுக்க முடியாமல் போலீசார் திணறினார்கள்.

ஹிங்கோலி மற்றும் லாத்தூர் பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மராத்தா சமுதாயத்தினர் பல வாகனங்களை தீ வைத்து எரித்தனர். கோலாப்பூரில் அரசு பஸ்களை அடித்து நொறுக்கினார்கள். ஷீரடியில் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சோலாப்பூரில் ஆஸ்பத்திரி சூறையாடப்பட்டது.

பர்பானியில் ரெயில்களை மறித்தனர். சத்தாரா, நாந்தெட், பாராமதி, மன்மாடு, அகமதுநகர், ஜல்னா உள்ளிட்ட இடங்களில் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். அப்போது, சாலைகளின் குறுக்கே டயர்களை எரித்து போக்கு வரத்தை முடக்கினார்கள்.

உஸ்மனாபாத்தில் மறியலில் ஈடுபட்டவர்கள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசின் உருவபொம்மையை எரித்தனர்.

சாலை மறியலின் போது, நாந்தெட்டில் மராத்தா சமுதாயத்தினர் கடைகள் மீது கற்களை வீசி பயங்கர வன்முறையில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை தடியடி நடத்தி விரட்டினர்.

பீட் கேரவாய் பகுதியில் நடந்த போராட்டத்தின் போது, 2 பேர் அங்குள்ள ஒரு கட்டிடத்தின் மீது ஏறி நின்று குதித்து விடுவதாக தற்கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு உண்டானது. தீயணைப்பு படையினர் இருவரையும் பத்திரமாக மீட்டனர்.

அவுரங்காபாத்தில் ஜகநாத் குட்டு என்பவர் விஷம் குடித்தும், ஜெயந்த் சோனவானே என்பவர் ஆற்றில் குதித்தும் தற்கொலைக்கு முயன்றனர். இருவரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள்.

இதற்கிடையே, கோதாவரி ஆற்றில் குதித்து இறந்த காகாசாகேப் ஷிண்டேயின் இறுதிச்சடங்கு நேற்று காலை அவுரங்காபாத்தில் நடந்தது. இதையொட்டி அங்கு ஆயிரக்கணக்கில் மராத்தா சமுதாயத்தினர் திரண்டு இருந்தனர். அப்போது, காகாசாகேப் ஷிண்டேயின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அப்பகுதி சிவசேனா எம்.பி. சந்திரகாந்த் கெய்ரே வந்தார். அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு திரண்டு இருந்தவர்கள் அவரது கார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினார்கள்.

மேலும் சந்திரகாந்த் கெய்ரேவுடன் கைகலப்பில் ஈடுபட்டு அவரை தாக்க முயன்றனர். சிவசேனா தொண்டர்கள் அவரை கூட்டத்தில் இருந்து பத்திரமாக அழைத்து சென்றனர்.

இதேபோல அங்கு வந்த காங்கிரஸ் மேல்-சபை உறுப்பினர் சுபாஷ் சம்பாத்தையும் தாக்க முயன்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.

இந்தநிலையில், வன்முறை தொடர்பாக வதந்தி பரவுவதை தடுக்க அவுரங்காபாத்தில் இணையதள சேவை தற்காலிக மாக துண்டிக்கப்பட்டது.

மராத்தா சமுதாயத்தினரின் போராட்டம் காரணமாக நேற்று மாநிலம் முழுவதும் முக்கிய சாலைகளில் போக்குவரத்து முடங்கியதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஆஷாடி ஏகாதசி திருவிழாவில் கலந்து கொண்டு விட்டு பண்டர்பூரில் இருந்து சொந்த ஊர்களுக்கு திரும்பி கொண்டிருந்த பலரும் சாலைகளில் தவித்தனர்.

இந்தநிலையில், மும்பை தாதரில் உள்ள சிவாஜி மந்திரில் கூடி ஆலோசனை நடத்திய மராத்தா சமுதாயத்தினர் இன்று (புதன்கிழமை) மும்பையில் முழு அடைப்பு நடத்தப்போவதாக அறிவித்தனர்.

இதேபோல வாஷியில் சகல் மராத்தா சமாஜ் என்ற அமைப்பினர் கூடி ஆலோசனை நடத்தினர். முடிவில், நவிமும்பை, பன்வெலில் இன்று முழு அடைப்பு நடத்த அழைப்பு விடுத்தனர். இதேபோல தானே, பால்கர், ராய்காட் மாவட்டங்களிலும் முழு அடைப்புகளுக்கு சில மராத்தா அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

முழு அடைப்பு போராட்டம் நடந்ததாலும் பள்ளிகள் வழக்கம் போல இயங்கும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முழு அடைப்பு போராட்டத்தையொட்டி மும்பையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.


Next Story