டி.என்.பி.எஸ்.சி. ஆன்லைன் தேர்வு எப்படி நடைபெறும்?


டி.என்.பி.எஸ்.சி. ஆன்லைன் தேர்வு எப்படி நடைபெறும்?
x
தினத்தந்தி 25 July 2018 3:07 PM IST (Updated: 25 July 2018 3:07 PM IST)
t-max-icont-min-icon

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு இணையதளம் வழியே நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

என்ஜினீயரிங் கவுன்சிலிங்கை அண்ணா பல்கலைக்கழகம் இந்த ஆண்டு இணையதளம் வழியே நடத்தி உள்ளது. தற்போது தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளும் இணையதளம் வழியே நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆன்லைன் தேர்வுக்கு ஆதரவும், எதிர்ப்பும் எழுந்த வண்ணம் இருந்தாலும், தமிழக அரசு, ஆன்லைன் தேர்வுக்கான ஒப்பந்தப்புள்ளிகளை எப்போதோ கோரிவிட்டது. விரைவில் ஆன்லைன் வழித் தேர்வுகள் நடப்பது உறுதி என்பது இதன் மூலம் தெரிய வந்துள்ளது. எந்த வகையில் ஆன்லைன் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்பது பற்றியும் ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பில் விவரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி தேர்வு எப்படி நடைபெறுகிறது, மாணவர்கள் அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்...

விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப குறிப்பிட்ட இடங்களில் தேர்வு மையங்கள் உருவாக்கப்படும். ‘லோக்கல் ஏரியா நெட்வொர்க் (LAN)’ மூலம் அந்த தேர்வு மையத்தில் உள்ள அனைத்து கணினிகளுக்கும் இணைப்பு கொடுக்கப்பட்டிருக்கும். அவை அனைத்து தேர்வு மையங்களுக்குமான பொதுவான சர்வர் கணினியுடன் இணைக்கப்பட்டு தேர்வுகள் நடைபெறும்.

வழக்கமான கொள்குறி வகை (ஆப்ஜெக்டிவ் டைப்) கேள்விகளே ஆன்லைன் தேர்விலும் இடம் பெறும். அதாவது வினாவும், அதன் கீழ் 4 விடைகளும் கொடுக்கப்பட்டு, சரியான விடையை தேர்வு செய்ய வேண்டும்.

ஒரு வினாவுக்கு விடையை தேர்வு செய்ததும், நெக்ஸ்ட் என்ற பொத்தான் வழியாக அடுத்த கேள்விக்குச் செல்லலாம்.

தேர்வு முடிந்ததும் இறுதியாக கருத்துப்படிவம் ஒன்றும் கொடுக்கப்படும், அதிலும் கணினி வழியாகவே பதில் நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும்.

மாணவர்களின் சந்தேகங்கள், விளக்கங்களைப் பெறவும் ஆன்லைன் தேர்வு முறையில் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இதற்காக ‘சேலஞ்ச் விண்டோ’ என்ற திரையை விண்ணப்பதாரர்கள் தேர்வு முடிந்த 7 நாட்களுக்குள் பயன்படுத்தி முறையிடலாம்.

சிறப்புகள்

தேர்வு தொடங்குவதற்கு 10 நிமிடம் முன்பாக எப்படி தேர்வு எழுத வேண்டும் என்று பயிற்சி வழங்கப்படும் என்பதால் மாணவர்கள் குழப்பமின்றி தேர்வு எழுதலாம்.

ஆன்லைன் தேர்வை சுலபமாக்கவும், குறைகளை களையவும் முதலில் குறைந்த அளவில் விண்ணப்பதாரர்கள் பங்கேற்கும் தேர்வில், பரிசோதனை முறையாக ஆன்லைன் தேர்வு நடை முறைப்படுத்தப்படும். பின்னர் படிப்படியாக அனைத்து தேர்வுகளும் ஆன்லைன் முறைக்கு மாற்றப்படும்.

ஆன்லைன் வழியே நடப்பதால் காப்பியடித்தல் உள்ளிட்ட தவறுகள் கட்டுப்படுத்தப்படும். ஒவ்வொருவருக்கும் கேள்விகள் குறிப்பிட்ட முறையில் மாற்றி அமைக்கப்பட்டிருக்கும் என்பதால் எந்த வகையிலும் காப்பியடிக்க முடியாது.

கணினி வழியே தேர்வுகள் நடப்பதால் தேர்வுத்தாளை திருத்துதல், விடைகளை வெளியிடுதல் ஆகியவற்றுக்கான நேரம் மிச்சமாகும். கணினி களால் உடனடியாக விடைகளை சரிபார்த்து முடிவுகளை அறிவிக்க முடியும்.

ஆன்லைன் தேர்வை நடத்திக் கொடுக்கும் அமைப்பாக தனியார் நிறுவனம் செயல்பட்டாலும், டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள்.

தேர்வு முடிந்ததுமே அனைத்து தகவல்களும் சர்வர் கணினிக்குச் சென்றுவிடும், பாதுகாப்பு மற்றும் நிர்வாக வசதிக்காக சில இடங்களில் நகல்களும் பராமரிக்கப்படும். ஆனால் தேர்வு நடந்த மையங்களிலும், வேறு எங்கும் வினாத்தாள் உள்ளிட்ட எந்த விவரங்களும் சேமிக்கப்படுவதில்லை என்பது முறைகேட்டை குறைக்கும்.

சில கேள்விகள்...

ஒப்பந்தப்புள்ளி விளம்பரத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் தேர்வு நடைபெறும் முறை பற்றி இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. இன்னும் விண்ணப்பதாரர் நிலையில் எழும் சந்தேகங்கள், தேவையான வசதிகள் எல்லாம் சீர் செய்யப்பட வேண்டும்.

உதாரணமாக அடுத்த கேள்விக்கு தாவிச் சென்ற பின்பு, திரும்ப விடை தெரியாத கேள்விக்கு யோசித்து பதிலளிப்பது எப்படி? என்பது போன்ற பல்வேறு ஐயங்களுக்கு தீர்வு காணப்பட வேண்டும்.

மாதிரி தேர்வுகள் மூலம் பயிற்சிகள் வழங்கலாம், வெள்ளோட்டம் பார்த்த பின்னர் ஆன்லைன் தேர்வை நடைமுறைப்படுத்தலாம்.

தேர்வு நடத்தும் பொறுப்பு தனியாரிடம் ஒப்படைப்பதால், விண்ணப்பதாரர்களின் கட்டணத் தொகை உயரலாம் மற்றும் வினாத்தாள் வெளியாவது போன்ற முறைகேடுகள் நடைபெற வாய்ப்பு உள்ளது என்ற அச்சம் நிலவுகிறது. ஏற்கனவே குரூப்-2 தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டு தோல்வி அடைந்திருப்பது அதற்கு சான்றாக காட்டப்படுகிறது. எனவே இதுபோன்ற குறைகளுக்கும் வழியிருக்கக்கூடாது.

நவீன தொழில்நுட்பத்துக்கு மாறுவது, விரைந்த செயல்பாட்டிற்கும், வளர்ச்சிக்கும் அத்தியாவசியமாகும். குறைகளை கடந்து ஆன்லைன் தேர்வு என்ற அடுத்த கட்ட வளர்ச்சிக்கு தன்னையும், தமிழக மாணவர்களையும், விண்ணப்பதாரர்களையும் தயார்படுத்த வேண்டியது தமிழக அரசின் பொறுப்பு! 

Next Story