வர்ணஜாலம் செய்த டிரோன்கள்


வர்ணஜாலம் செய்த டிரோன்கள்
x
தினத்தந்தி 25 July 2018 3:29 PM IST (Updated: 25 July 2018 3:29 PM IST)
t-max-icont-min-icon

தனிநபர் கணினிகள் உருவாக அடிகோலியவை இன்டெல் நிறுவனத்தின் மைக்ரோபிராசஸர் சிப்புகள்.

இன்று கணினிகள், ஸ்மார்ட்போன்கள் போன்ற உலகின் 80 சதவீதத்துக்கு மேற்பட்ட எலக்ட்ரானிக் பொருட்களில் இந்த நிறுவனத்தின் எலக்ட்ரானிக் சிப்களே, மூளையாக இருந்து இயக்கிக் கொண்டிருக்கின்றன. நாம் தொழில்நுட்ப உலகில் பேசும், க்வால்காம், ஸ்னாப்டிராகான், ஐ7 போன்ற மைக்ரோபிராசஸர் சிப்கள் எல்லாம் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள்தாம்.

உலகின் மிகப்பெரிய எலக்ட்ரானிக் சிப் தயாரிப்பு நிறுவனமான இன்டெல் தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதற்கான பிரமாண்ட விழா, அமெரிக்காவில் நடைபெற்றது. இன்டெல் நிறுவனத்தின் சாதனைகள், உலக தொழில்நுட்ப வளர்ச்சியில் மைல்கற்களாக அமைந்துள்ளன.. இன்றைய தனிநபர் கணினிகளைப்போலவே நாளைய குவாண்டம் கணினிகள், செயற்கை அறிவு சாதனங்கள் உருவாக பெரும் பங்களிப்பு செய்து வருகிறது இன்டெல். இதன் 50-ம் ஆண்டு நிறைவில் அதைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களை அசைபோடுவோம்...

இன்டெல் நிறுவனம் 1968-ல், ‌ஜூலை 18-ந் தேதி ராபர்ட் நோய்ஸ் மற்றும் கார்டான் மூர் ஆகியோரால் தொடங்கப்பட்டது. இவர்களில் நோய்ஸ்தான் ‘மைக்ரோ சிப்’ உருவாக்கிய சூத்திரதாரியாவார்.

1971-ம் ஆண்டு நவம்பர் 15-ந் தேதி இந்த நிறுவனம், மைக்ரோ பிராசஸர் சிப்களை வணிக ரீதியில் தயாரித்து விற்பனை செய்தபிறகு தனிநபர் கணினிகள் தோன்றின. மேம்படுத்தப்பட்ட மைக்ரோ சிப்கள் 1990-ல் உருவாக்கப்பட்ட பின்னரே கணினி தொழிற்சாலைகள் உலகெங்கிலும் புத்துயிர் பெற்றன.

பென்டியம், சென்ரினோ, கோர், க்வால்காம், ஸ்னாப்டிராகன், இன்டெல் ஆட்டம், நெகலெம், சான்டி பிரிஜ், இன்டெல் குவார்க், கோர் ஐ வரிசை சிப்கள் போன்றவை இன்டெல் நிறுவனத்தின் புகழ்பெற்ற பிராசஸர்களில் குறிப்பிடத்தக்கவை. நாம் பயன்படுத்தும் பெரும்பாலான செல்போன்கள், கணினிகள் மற்றும் எலக்ட்ரானிக் கருவிகளில் இவற்றில் ஏதாவதொரு பிராசஸரில் இயங்கிக் கொண்டிருக்கலாம்.

அமெரிக்க உள்நாட்டு உற்பத்தியில் இந்த நிறுவனம் ஆண்டிற்கு சுமார் 1½ லட்சம் கோடி ரூபாய்க்குமேல் பங்களிப்பு செய்கிறது. மறைமுகமாக இதேபோல் 3 மடங்கு வருவாயை ஈட்டித் தருகிறது.

இன்டெல் நிறுவனத்தில் அமெரிக்காவில் மட்டும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்கிறார்கள். உலகம் முழுவதும் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 5 லட்சம் பேர் பணி வாய்ப்பு பெறுகிறார்கள்.

இன்டெல் ஒரு ஆண்டிற்கு 300 குவாட்ரிலியன் (குவாட்ரிலியன் என்பது 100 லட்சம் கோடிகளை குறிக்கும்) டிரான்சிஸ்டர்களை உற்பத்தி செய்கிறது. அதாவது நிமிடத்திற்கு ஆயிரம் கோடி டிரான்சிஸ்டர்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

செயற்கை அறிவு தொழில்நுட்பம், தானியங்கி வாகனங்கள், 5ஜி தொழில்நுட்பம், டிரோன்கள் உள்ளிட்ட எதிர்கால தொழில்நுட்பங்களுக்கு அதிகமான தொகையை முதலீடு செய்துள்ள 3-வது பெரிய நிறுவனம் இன்டெல் ஆகும். தானியங்கி தொழில்நுட்ப துறையில் மட்டும் 15.3 பில்லியன் அமெரிக்க டாலர் தொகையை முதலீடு செய்துள்ளது.

குவாண்டம் கணினித் தொழில்நுட்பத்தில் 50 மில்லியன் டாலர் தொகையை முதலீடு செய்திருக்கிறது.

லோய்கி எனப்படும் செயற்கை அறிவு சிப் ஒன்றை இன்டெல் தயாரித்துள்ளது. இது மூளையின் செயல்பாடுகளை கணித்து அதற்கேற்ப செயல்படக் கூடியதாகும்.

5ஜி தொழில்நுட்பத்தின் முதல் கட்ட பரிசோதனையை 2016-ம் ஆண்டிலேயே சோதித்துப் பார்த்துவிட்டது இன்டெல். 5ஜி தொழில்நுட்ப சிப்புகள்தான் தானியங்கி வாகனங்கள், ஸ்மார்ட் மருத்துவமனைகள், வீடுகளில் பயன்படுத்தப்படப் போகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக சேவை, ஊழியர் நலன், பங்குதாரர் நலன் உள்ளிட்ட பல்வேறு சிறப்புகளுக்காக 2017-ம் ஆண்டில் உலகின் நன்னெறி மிக்க நிறுவனத்திற்கான சான்றிதழை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இன்டெல் நிறுவனத்தின் 50 ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடும் வகையில் 2018 டிரோன்கள் இணைந்து ஆகாயத்தில் மின்கடத்திகளின் (டிரான்சிஸ்டர்கள்) மாயாஜாலத்தை நிகழ்த்திக் காட்டின. அந்த வியக்க வைக்கும் வீடியோக் காட்சிகள் இப்போது இணையத்தில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. இது கின்னஸ் உலக சாதனையாகவும் பதிவானது. அந்த வர்ணஜாலத்தின் கிளிக்தான் அருகில் உள்ள படங்களில்... 

Next Story