ஸ்ரீவைகுண்டம் அருகே மனைவியை உயிரோடு எரித்து விட்டு கணவரும் தீக்குளித்ததால் பரபரப்பு காப்பாற்ற முயன்ற மாமியார்–பாட்டி கருகின


ஸ்ரீவைகுண்டம் அருகே மனைவியை உயிரோடு எரித்து விட்டு கணவரும் தீக்குளித்ததால் பரபரப்பு காப்பாற்ற முயன்ற மாமியார்–பாட்டி கருகின
x
தினத்தந்தி 26 July 2018 3:00 AM IST (Updated: 25 July 2018 6:53 PM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவைகுண்டம் அருகே குடும்பம் நடத்த வர மறுத்த மனைவி மீது மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்து எரித்த கணவரும் தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

ஸ்ரீவைகுண்டம், 

ஸ்ரீவைகுண்டம் அருகே குடும்பம் நடத்த வர மறுத்த மனைவி மீது மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்து எரித்த கணவரும் தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அவர்களை காப்பாற்ற முயன்ற மாமியார்– பாட்டி ஆகியோரும் தீயில் கருகி படுகாயம் அடைந்தனர். இந்த 4 பேரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டிரைவர்

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளத்தைச் சேர்ந்தவர் சுடலை. இவருடைய மகன் சங்கர் (வயது 30). டிரைவர். இவருக்கும், உறவினரான ஸ்ரீவைகுண்டம் அருகே பேரூரைச் சேர்ந்த முருகன் மகள் கீதாவுக்கும் (22) கடந்த 1½ ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை இல்லை.

சங்கர் 5–ம் வகுப்பு படித்து உள்ளார். கீதா பி.ஏ. பட்டப்படிப்பு படித்து உள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு கீதா தன்னுடைய கணவரிடம் கோபித்து கொண்டு, ஸ்ரீவைகுண்டம் அருகே பேரூரில் உள்ள தன்னுடைய பெற்றோரின் வீட்டுக்கு சென்று விட்டார்.

மனைவி தீ வைத்து எரிப்பு

பின்னர் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு சங்கர் தன்னுடைய மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைக்க சென்றார். ஆனால் கீதா தன்னுடைய கணவருடன் செல்ல மறுத்து விட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் அவர் மீண்டும் தன்னுடைய மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைப்பதற்காக பேரூரில் உள்ள மாமனாரின் வீட்டுக்கு சென்றார். அப்போது அவர் ஒரு பாட்டிலில் மண்எண்ணையை நிரப்பி, மறைத்து எடுத்து சென்றார்.

மாமனாரின் வீட்டிற்கு சென்ற அவர், தன்னுடைய மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். ஆனால் கீதா மறுத்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த சங்கர், மறைத்து வைத்து இருந்த மண்எண்ணையை எடுத்து கீதாவின் மீதும், தனது உடலின் மீதும் ஊற்றி தீ வைத்தார். இதில் 2 பேரின் மீதும் தீப்பற்றி எரிந்தது.

4 பேருக்கும் தீவிர சிகிச்சை

உடனே கீதாவின் தாயார் பெருமா (42), அவருடைய தாயார் செல்லப்பொண்ணு (63) ஆகியோர் 2பேரின் உடலில் எரிந்த தீயை அணைக்க முயன்றனர். இதில் அவர்கள் மீதும் தீப்பிடித்து எரிந்தது. இந்த 4பேரின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று, சங்கர், கீதா, பெருமா, செல்லப்பொண்ணு ஆகிய 4 பேர் மீதும் எரிந்த தீயை அணைத்தனர்.

பலத்த தீக்காயங்களுடன் இருந்த அவர்களை சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சங்கர், கீதா ஆகிய 2 பேருக்கும் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், ஸ்ரீவைகுண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

குடும்பம் நடத்த வர மறுத்ததால், மனைவிக்கு தீ வைத்து விட்டு கணவர் தீக்குளித்தபோது, அவர்களைக் காப்பாற்ற முயன்ற மாமியார்– பாட்டி படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story