கலெக்டர் அலுவலகம் முன் விவசாய தொழிலாளர்கள் சத்யாகிரக போராட்டம்


கலெக்டர் அலுவலகம் முன் விவசாய தொழிலாளர்கள் சத்யாகிரக  போராட்டம்
x
தினத்தந்தி 26 July 2018 4:30 AM IST (Updated: 25 July 2018 9:19 PM IST)
t-max-icont-min-icon

ஊராட்சிகளில் 100 நாள் வேலை வழங்க மறுப்பதை கண்டித்து நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகம் முன் விவசாய தொழிலாளர்கள் சத்யாகிரக போராட்டம் நடத்தினர்.

நாகர்கோவில்,

ஊராட்சிகளில் 100 நாள் வேலை வழங்க மறுப்பதை கண்டித்தும், தொழிலாளர்களின் வேலை அட்டை அதிகாரிகளால் பறிக்கப்படுவதை கண்டித்தும், சட்டவிரோதமாக அதிகாரிகள் வைத்துள்ள வேலை அட்டைகளை தொழிலாளர்களிடம் ஒப்படைக்கக் கோரியும், ஊரக தொழிலில் பொக்லைன் எந்திரத்தை பயன்படுத்தக்கூடாது, வேலை அட்டை பெற்ற அனைத்து தொழிலாளர்களுக்கும் உடனே வேலை வழங்க வேண்டும்.

முழுதினக்கூலி ரூ.224 வழங்க வேண்டும், அதனை படிப்படியாக ரூ.300 ஆகவும், 100 நாள் வேலையை 150 நாள் வேலையாகவும் உயர்த்தி தரவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் தோவாளை, அகஸ்தீஸ்வரம், ராஜாக்கமங்கலம், நாகர்கோவில் குழுக்கள் சார்பில் சத்யாகிரக போராட்டம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று நடந்தது.

போராட்டத்துக்கு விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணைத்தலைவர் சாகுல்ஹமீது தலைமை தாங்கினார். லெட்சுமி, பரமசிவம், சுயம்பு, மணிமேகலை உள்பட பலர் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்.பி. பெல்லார்மின் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் செல்லசுவாமி, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் கண்ணன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் மலைவிளை பாசி நிறைவுரை ஆற்றினார்.

இதில் தோவாளை, அகஸ்தீஸ்வரம், ராஜாக்கமங்கலம், நாகர்கோவில் பகுதிகளை சேர்ந்த விவசாய தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story