சீர்காழியில், படுகொலை செய்யப்பட்ட அ.தி.மு.க. பிரமுகரின் பூர்வீக வீட்டில் கொள்ளை முயற்சி


சீர்காழியில், படுகொலை செய்யப்பட்ட அ.தி.மு.க. பிரமுகரின் பூர்வீக வீட்டில் கொள்ளை முயற்சி
x
தினத்தந்தி 26 July 2018 4:45 AM IST (Updated: 26 July 2018 12:05 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழியில், படுகொலை செய்யப்பட்ட அ.தி.மு.க. பிரமுகரின் பூர்வீக வீட்டில் கொள்ளை முயற்சி நடந்தது. அந்த வீட்டில் இருந்த முக்கிய ஆவணங்களை எடுப்பதற்காக இந்த கொள்ளை முயற்சி நடந்ததா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சீர்காழி,

நாகை மாவட்டம் சீர்காழி தாலுகா எடமணல் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ்பாபு(வயது 47). அ.தி.மு.க. பிரமுகரான இவர், கடந்த 23-ந் தேதி வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் நாகை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ரமேஷ்பாபு தனது குடும்பத்தினர் மற்றும் சகோதரர் சீனுவாசனுடன் சீர்காழி தென்பாதி சங்கர் நகரில் உள்ள தனது சொந்த வீட்டில் வசித்து வந்தார். ரமேஷ்பாபுவின் தந்தை லெட்சுமிகாந்தன், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போனதால் அவரது தாயார் வசந்தா மகன் வீட்டிலும், எடமணல் கிராமத்தில் உள்ள பூர்வீக வீட்டிலும் வசித்து வந்தார். கடந்த 23-ந் தேதி ரமேஷ்பாபு படுகொலை செய்யப்பட்டதை அறிந்த தாயார் வசந்தா, எடமணல் கிராமத்தில் உள்ள வீட்டை பூட்டிவிட்டு சீர்காழியில் உள்ள தனது மகன் வீட்டுக்கு வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு எடமணல் கிராமத்தில் உள்ள ரமேஷ்பாபுவின் தாயார் வசந்தா வசித்து வந்த வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனை அறிந்த ரமேஷ்பாபுவின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து அங்கு சென்று பார்த்தனர். அப்போது மர்ம நபர்கள், வீட்டின் பின்புற கதவை உடைத்து உள்ளே சென்றதும், அறையில் இருந்த பீரோவை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

இந்த கொள்ளை முயற்சி நகை-பணத்திற்காக நடந்ததா? அல்லது அந்த வீட்டில் இருந்த வேறு ஏதேனும் முக்கிய ஆவணங்களை எடுப்பதற்காக நடந்ததா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கு தொடர்பாக போலீசார் சில முக்கிய தடயங்களை வைத்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் ரமேஷ்பாபுவின் பூர்வீக வீட்டில் நடந்த கொள்ளை முயற்சி சம்பவம் வழக்கை திசை திருப்பவதற்காக அரங்கேற்றப்பட்டதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த கொலை சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் பூர்வீக வீட்டின் கொள்ளை முயற்சி நாகை மாவட்டத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story