திருத்துறைப்பூண்டியில் லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்


திருத்துறைப்பூண்டியில் லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 July 2018 4:15 AM IST (Updated: 26 July 2018 12:22 AM IST)
t-max-icont-min-icon

திருத்துறைப்பூண்டியில் லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருத்துறைப்பூண்டி,

டீசல் விலையை குறைக்க வேண்டும். சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும். மூன்றாம் நபர் காப்பீடு கட்டணம் உயர்வை திரும்ப பெற வேண்டும். தமிழக அரசு டீசல் மீதான வாட் வரியை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்டத்தில் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று 6-வது நாளாக வேலை நிறுத்தம் நீடித்தது. இதையொட்டி திருத்துறைப்பூண்டியில் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருத்துறைப்பூண்டி தலைமை தபால் நிலையம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார்.

சங்க செயலாளர் சீனிவாசன், துணை தலைவர் சேகர், துணை செயலாளர் இளங்கோ, மன்னார்குடி லாரி உரிமையாளர் சங்க தலைவர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் லாரி உரிமையாளர்களுடன், மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. முன்னதாக கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் ஊர்வலம் சென்றனர். ஊர்வலம், திருத்துறைப்பூண்டி லாரி உரிமையாளர் சங்க அலுவலகத்தில் இருந்து தொடங்கி தலைமை தபால் நிலையம் வரை நடந்தது. 

Next Story