வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம்


வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 26 July 2018 4:15 AM IST (Updated: 26 July 2018 12:33 AM IST)
t-max-icont-min-icon

வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழா முன்னேற்்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் சுரேஷ்குமார் தலைமையில் நடந்தது.

நாகப்பட்டினம்,

நாகையை அடுத்த வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழா அடுத்த மாதம் 29-ந் தேதி தொடங்கி செப்டம்பர் மாதம் 8-ந் தேதி வரை நடைபெற உள்ளது. விழா தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்த முதல் கட்ட ஆலோசனை கூட்டம் நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சுரேஷ்குமார் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

வேளாங்கண்ணி நகரில் திருவிழாவையொட்டி ஒரு வழிப்பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து காவல் துறையினர் விழா முடியும் கடைசி நாள் வரை கண்காணித்து பொது மக்கள் சிரமமின்றி வந்து செல்ல தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுகாதாரத்்துறையினர் தற்காலிக மருத்துவ முகாம்களை அமைத்து பொது மக்களுக்கு தேவையான சிகிச்சைகளை அளிக்க வேண்டும். தீயணைப்புத்துறையினர் அனைத்து வகையான வசதிகளுடன் விழா முடியும் வரை தீயணைப்பு வாகனங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். கடல் மற்றும் ஆற்றங்கரையில் குளிப்பவர்கள் அதிக தூரம் செல்லாமல் கரையோரங்களில் குளிக்க அறிவுறுத்தவும், மீன்வளத்துறையின் ரோந்து படகு மூலம் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். பாதுகாப்பான இடம் தேர்வு செய்யப்பட்டு, ஆண், பெண் தனித்தனியே குளிக்க உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். வேளாங்கண்ணி பேரூராட்சி சார்பில் தடுப்பு வேலி அமைக்கப்பட உள்ளது. வேளாங்கண்ணியில் உள்ள வர்த்தகர்கள் பிளாஸ்டிக் பை மற்றும் கப் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளதற்கு தகுந்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன், மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன், உதவி கலெக்டர் கமல் கிஷோர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கர், துணை இயக்குனர் (சுகாதாரப் பணிகள்) சண்முகசுந்தரம், வேளாங்கண்ணி பேராலய அதிபர் பிரபாகர், பங்கு தந்தை சூசைமாணிக்கம் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

Next Story