காதலித்த மாணவி பேசாததால் மிரட்டிய ஆட்டோ டிரைவர் கைது


காதலித்த மாணவி பேசாததால் மிரட்டிய ஆட்டோ டிரைவர் கைது
x
தினத்தந்தி 26 July 2018 3:15 AM IST (Updated: 26 July 2018 1:57 AM IST)
t-max-icont-min-icon

காதலித்த கல்லூரி மாணவி திடீரென பேசாததால் அவரை மிரட்டிய ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை,


திருவண்ணாமலையில் உள்ள கீழ்நாத்தூர் ரோடு வேடியப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் விஜய் (வயது 25). ஆட்டோ டிரைவர். இவரும் வேலூர் மாவட்டம் ஆற்காட்டில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வரும் திருவண்ணாமலை பகுதியை சேர்ந்த 21 வயதுடைய மாணவியும் நட்புரீதியாக பழகி வந்தனர்.

பின்னர் இந்த நட்பானது காதலாக மாறியது. கடந்த சில தினங்களுக்கு முன்பு மாணவியை விஜய் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி விஜய்யை விட்டு விலகினார். விஜய் ஆத்திரமடைந்து அந்த மாணவியிடம் தொடர்ந்து தன்னிடம் பழகுமாறு வற்புறுத்தி உள்ளார்.

இது குறித்து அந்த மாணவி தந்தையிடம் தெரிவிக்கவே அவர் மகளை திருவண்ணாமலை பஸ் நிலையத்துக்கு வந்து அனுப்பி வைப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். கடந்த 23-ந் தேதி காலை மகளை கல்லூரிக்கு அனுப்புவதற்காக திருவண்ணாமலை பஸ் நிலையத்துக்கு வழக்கம்போல் அழைத்து வந்து விட்டுச்சென்றுள்ளார்.

அப்போது அங்கு திடீரென விஜய் வந்தார். அவர் அந்த மாணவியை தன்னிடம் பேசுமாறு தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த விஜய் என்னிடம் பேசவில்லை என்றால், உன்னையும், உனது குடும்பத்தினரையும் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியதாக தெரிகிறது.

அந்த மாணவி நடந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் கூறினார். அது குறித்து திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜய்யை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story