சிவகாசி அருகே தலைமை ஆசிரியை வீட்டில் தங்கம்–வைர நகைகள் கொள்ளை


சிவகாசி அருகே தலைமை ஆசிரியை வீட்டில் தங்கம்–வைர நகைகள் கொள்ளை
x
தினத்தந்தி 26 July 2018 3:15 AM IST (Updated: 26 July 2018 2:00 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசி அருகே தலைமை ஆசிரியை வீட்டின் கதவை உடைத்து தங்கம் மற்றும் வைர நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

சிவகாசி,

சிவகாசி அருகே உள்ள எஸ்.என்.புரம் சிவகாசிகணேசன் காலனியை சேர்ந்தவர் கார்த்திகேயன்(வயது 46). இவர் அதே பகுதியில் கல்வி அறக்கட்டளை நடத்தி வருகிறார். இவரது மனைவி சுந்தரலட்சுமி சிவகாசியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு ஆதர்சன் என்ற மகனும், நிவேதிதா என்ற மகளும் உள்ளனர். இதில் ஆதர்சன் சென்னையில் வேலை செய்து வருகிறார். நிவேதிதா மதுரையில் படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் கணவன், மனைவி இருவரும் பணி தொடர்பாக வெளியே சென்று விட்டனர்.

இந்த நிலையில் மாலை 6 மணிக்கு வேலை முடிந்து தலைமை ஆசிரியை சுந்தரலட்சுமி முதலில் வீடு திரும்பி உள்ளார். கதவை திறந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தனது கணவர் கார்த்திகேயனுக்கு தகவல் கொடுத்துவிட்டு படுக்கை அறைக்கு சென்றார். அங்கு பீரோவில் இருந்த 30 பவுன் தங்க நகைகள், வைர நெக்லஸ், 1 ஜோடி வைர கம்மல் மற்றும் ரூ.5 ஆயிரம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. வீட்டின் பின்கதவை உடைத்து நகைகளை திருடி சென்றுள்ளனர்.

இதுகுறித்து திருத்தங்கல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் திருத்தங்கல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் வீட்டின் பின்பக்க கதவை உடைக்க பயன்படுத்திய கடப்பாறையை எடுத்து ஆய்வு செய்தனர். கடப்பாறையை பயன்படுத்திய கொள்ளையர்கள் அதை வீட்டின் ஒரு ஓரமாக வைத்து விட்டு சென்றுள்ளனர். கொள்ளை சம்பவம் நடைபெற்ற வீட்டை சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.


Next Story