சிவகாசி பகுதியில் அதிகரித்து வரும் பட்டாசு கடைகள், அதிகாரிகள் கண்காணிக்க வலியுறுத்தல்


சிவகாசி பகுதியில் அதிகரித்து வரும் பட்டாசு கடைகள், அதிகாரிகள் கண்காணிக்க வலியுறுத்தல்
x
தினத்தந்தி 26 July 2018 3:30 AM IST (Updated: 26 July 2018 2:00 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசி பகுதியில் பட்டாசு கடை திறப்போர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் விதிமீறலை அதிகாரிகள் கண்காணிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

தாயில்பட்டி,

சிவகாசி சுற்று வட்டார பகுதிகளில் 10 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 300 பட்டாசு கடைகள் மட்டுமே இருந்தன. தற்போது அந்த எண்ணிக்கை ஆயிரத்தை தொடுகிறது. வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் மட்டும் 150-க்கும் அதிகமான கடைகள் உள்ளன.

முன்பு பட்டாசு உற்பத்தியாளர்கள், தயாரான பட்டாசுகளை தீபாவளி சீசன் தொடங்கும் வரை 8 மாதம் குடோன்களை வாடகைக்கு எடுத்து அங்கு தேக்கி வைப்பார்கள். ஆனால் தற்போது தீபாவளி மட்டுமின்றி எப்போதும் பட்டாசு தேவைப்படுவதால் வாங்க வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் பட்டாசு கடைகள் அதிகரித்து வருகிறது.

விலை போகாத பட்டா நிலங்களை பிடித்து அங்கு கடை போடுகிறார்கள். இதற்கு புரோக்கர்களும் உள்ளனர். வருடத்துக்கு ரூ.2 லட்சம் அல்லது மாதத்துக்கு ரூ.20 ஆயிரம் குத்தகைக்கு இடம் பிடித்து அங்கு கடை திறக்கின்றனர். வடமாநிலங்களில் இருந்து இங்கு வந்து பட்டாசு வாங்கிச்செல்கின்றனர். சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் பலகாரச்சீட்டு பிடிப்பதுடன், பட்டாசு சீட்டு என்று பலர் ஆள் பிடித்து மாதாமாதம் பணம் வசூலித்து தீபாவளி சமயத்தில் கிப்ட் பாக்சாக பட்டாசுகளை பெருமளவு வாங்கிச்செல்லும் நிலை உள்ளது. இந்த ஆர்டர் அதிகமாக வருவதால் இதற்கான பணிகளும் இந்த கடைகளில் நடக்கிறது.

பெரிய பட்டாசு நிறுவனங்கள் நகரங்களை தேடிச்சென்று ஷோரூம் திறந்து விற்பனை செய்து வரும் நிலையில் சிறியஅளவில் ஆலை வைத்திருப்போர் இந்த மாதிரியான கடைகளை சொந்த ஊரின் அருகிலேயே திறக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். குடோனில் வாடகை கொடுத்து தேக்கி வைப்பதை விட கடைகளை திறப்பதே லாபமானது என்று கருதுகின்றனர். சிலர் மொத்தமாக ஆலைகளில் சரக்குகளை வாங்கி விற்கவும் கடை திறந்துள்ளனர். கடை எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சிறிய பட்டாசு ஆலை உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் உற்பத்தியும் முழுவீச்சில் நடந்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமைகளிலும் வேலை நடக்கிறது.

ஆனால் இந்த கடைகளை திறப்போர் உரிய பாதுகாப்பு விதிகளை பின்பற்றுகிறார்களா என்பதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டியது அவசியமாகும். மேலும் சாலையோரங்களில் கடை திறப்போர் வடிகால்களை மூடிவிடுகின்றனர். எனவே அதில் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

Next Story