ஏல மையங்களில் தேயிலைத்தூள் கிலோவுக்கு ரூ.150 விலை நிர்ணயம் செய்ய வேண்டும்: அரசியல் கட்சியினர், விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை


ஏல மையங்களில் தேயிலைத்தூள் கிலோவுக்கு ரூ.150 விலை நிர்ணயம் செய்ய வேண்டும்: அரசியல் கட்சியினர், விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை
x
தினத்தந்தி 26 July 2018 4:00 AM IST (Updated: 26 July 2018 3:03 AM IST)
t-max-icont-min-icon

ஏல மையங்களில் தேயிலைத்தூள் கிலோவுக்கு ரூ.150 விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சியினர், விவசாயிகள் சங்கத்தினர் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

ஊட்டி,

நீலகிரி மாவட்ட அரசியல் கட்சிகள் மற்றும் விவசாயிகள் சங்கங்கள் சார்பில், மஞ்சை மோகன் (படுக தேச கட்சி), நஞ்சுண்ட போஜன் (பா.ஜனதா), செந்தில்குமார் (பா.ம.க.), டி.சந்திரன் (அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்), ஷேக் தாவூத் (மனிதநேய மக்கள் கட்சி), போஜராஜ் (இந்திய கம்யூனிஸ்டு), விஸ்வநாதன் (ஜனதாதளம்) உள்ளிட்டோர் ஊட்டி பிங்கர்போஸ்ட்டில் உள்ள நீலகிரி மாவட்ட கலெக்டர் கூடுதல் அலுவலகத்தில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருப்பதாவது:–

நீலகிரி மாவட்டம் மலைமாவட்டம் என்பதால் தேயிலை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இந்த தொழிலை நம்பி 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளும், பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் உள்ளனர். ஆனால் பச்சை தேயிலைக்கு கடந்த 25 ஆண்டுகளாக சரியான விலை கிடைக்கவில்லை. இதனால் நீலகிரியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் வேலை தேடி சமவெளி பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

தேயிலை விவசாயத்தை காப்பாற்ற அரசு மற்றும் தனியார் தேயிலைத்தூள் ஏல மையங்களில் ஒரு கிலோ தேயிலைத்தூள் ரூ.150 விலை நிர்ணயம் செய்து ஏலம் விட வேண்டும். அதற்கு குறைவாக ஏலம் விடக்கூடாது. ஏல முறை இல்லாமல் தேயிலைத்தூளை பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்வது, ஏற்றுமதி செய்வது போன்றவற்றில் கிடைக்கும் லாபத்தை சம்மந்தப்பட்ட தேயிலை தொழிற்சாலைகள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். மாவட்ட கலெக்டர் தலைமையில் உள்ள மாதாந்திர விலை நிர்ணயக்குழு மூலம் பச்சை தேயிலைக்கு விலை நிர்ணயம் செய்யக்கூடாது.

நீலகிரி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் தேயிலை தொழிற்சாலைகள் மாதந்தோறும் வழங்கும் பச்சை தேயிலைக்கான விலை பட்டியலை அறிவிப்பு பலகையில் குறிப்பிடுவதுடன், பத்திரிகைகள் வழியாக விவசாயிகளுக்கு தெரிவிக்க வேண்டும். தேயிலை விவசாயிகளை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story