தொடர் மழையால் மலையில் புதிதாக தோன்றிய நீரூற்றுகள், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி


தொடர் மழையால் மலையில் புதிதாக தோன்றிய நீரூற்றுகள், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 26 July 2018 4:15 AM IST (Updated: 26 July 2018 3:03 AM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழையால் மலையில் புதிதாக நீரூற்றுகள் தோன்றி உள்ளது. இதனை கண்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதம் கோடை சீசன் நடைபெறுகிறது. இந்த காலங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்து செல்கிறார்கள். கோடை சீசன் முடிந்த பின்னர், ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் தென்மேற்கு பருவமழையும், செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழையும் பெய்வது வழக்கம். இந்த ஆண்டு கடந்த ஜூன் மாதம் முதலே தென்மேற்கு பருவமழை தொடங்கி விட்டது. இந்த மழையின் தாக்கம் கூடலூர், பந்தலூர், ஊட்டி பகுதிகளில் அதிகமாக இருக்கும். தென்மேற்கு பருவமழையினால் ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் விடாமல் மழை பெய்து கொண்டே இருக்கும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மழை அதிகமாக பெய்து உள்ளது.

தொடர் மழையால் ஊட்டி அருகே உள்ள காமராஜ் சாகர் அணை, பைக்காரா அணை, எமரால்டு அணை, மஞ்சூர் அருகே உள்ள கெத்தை அணை, குந்தா அணை உள்ளிட்ட முக்கிய அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து கடல்போல் காட்சி அளித்து வருகிறது. வனப்பகுதிகளில் இருந்து தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளதால் அணைகளுக்கு தண்ணீர் வந்து கொண்டே இருக்கிறது. இதேபோல் ஊட்டி நகராட்சிக்குட்பட்ட அணைகளில் தண்ணீர் போதிய அளவு இருப்பு உள்ளது. ஊட்டி அருகே உள்ள எமரால்டு நீர்ப்பிடிப்பு பகுதியில் தண்ணீரின் நீர்மட்டம் அதிகரித்து உள்ளது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கடல்போல் காட்சி அளிக்கிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு நீர்ப்பிடிப்பு பகுதியில் அதிகளவு தண்ணீர் உயர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

சுற்றுலா நகரமான ஊட்டியில் கடந்த 2 நாட்களாக மழை பெய்யாமல் இருந்தது. இந்த நிலையில் நேற்று காலையில் இருந்து ஊட்டி நகரில் வெயில் அடித்தது. பின்னர் வானம் மேகமூட்டத்துடன் மப்பும், மந்தாரமுமாக காணப்பட்டது. மதியத்துக்கு பிறகு மீண்டும் சாரல் மழை தொடர்ந்தது. இதனால் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, ஊட்டி படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் மழையில் நனையாமல் இருக்க குடைகளை பிடித்தபடி நடந்து சென்றனர். மழையின் நடுவேயும் அவர்கள் சுற்றுலா தலங்களை கண்டு ரசித்தனர்.

நீலகிரி மாவட்டம் மலைப்பிரதேசமாக உள்ளதால், இயற்கை அழகுக்கு பஞ்சமே இல்லை. மலைகளை மோதி செல்லும் மேகக்கூட்டங்கள், அடர்ந்து உயர்ந்து வளர்ந்த பசுமையான மரங்கள், தேயிலை தோட்டங்கள் போன்றவை மனதை கொள்ளை கொள்கிறது. ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் ஆங்காங்கே மலைகளில் புதிய நீரூற்றுகள் தோன்றி உள்ளன. மேகமூட்டங்களுக்கு நடுவே வெள்ளியை உருக்கியது போல மலையில் இருந்து தண்ணீர் கீழே வந்து கொண்டே இருக்கிறது. ஊட்டி அருகே உள்ள எல்லக்கண்டி பகுதியில் உள்ள மலையில் புதியதாக 2 நீரூற்றுகள் தோன்றி உள்ளது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story