ஊட்டி அருகே பரபரப்பு: வனத்துறை ஊழியர் உள்பட 2 பேரை சிறுத்தைப்புலி தாக்கியது


ஊட்டி அருகே பரபரப்பு: வனத்துறை ஊழியர் உள்பட 2 பேரை சிறுத்தைப்புலி தாக்கியது
x
தினத்தந்தி 26 July 2018 5:00 AM IST (Updated: 26 July 2018 3:03 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி அருகே தேயிலை தோட்டத்தில் வனத்துறை ஊழியர் உள்பட 2 பேரை சிறுத்தைப்புலி தாக்கியது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே தூனேரி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான தேயிலை தோட்டம் உள்ளது. இங்கு கூடலூர் தேவாலாவை சேர்ந்த வேல்முருகன் (வயது 38) உள்பட 6 தொழிலாளர்கள் பச்சை தேயிலையை பறிக்கும் பணியில் நேற்று மதியம் ஈடுபட்டனர். அப்போது சிறுத்தைப்புலி ஒன்று திடீரென்று அங்கு வந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் ஆளுக்கொரு திசையில் ஓட்டம் பிடித்தனர். ஆனால் அந்த சிறுத்தைப்புலி வேல்முருகனை விரட்டிச்சென்று தாக்கியது. இதனால் அவர் கூச்சல் போட்டார். உடனே மற்ற தொழிலாளர்களும் சேர்ந்து கூச்சல் போட்டு சிறுத்தைப்புலியை துரத்தினர்.

சிறுத்தைப்புலி தாக்கியதில் தலையில் லேசான காயம் அடைந்த வேல்முருகன் சிகிச்சைக்காக தூனேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

இது குறித்த தகவலின் பேரில் வனச்சரகர் முத்துகிருஷ்ணன் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள், அந்த சிறுத்தைப்புலி தேயிலை தோட்டத்தில் பதுங்கி உள்ளதா? என்று ஆய்வு செய்தனர். அப்போது தேயிலை தோட்டத்தில் ஒரு குட்டியுடன் சிறுத்தைப்புலி இருந்தது. இதை பார்த்து வனத்துறையினர் சிறுத்தைப்புலியை விரட்ட முயன்றனர்.

இதனால் ஆவேசம் அடைந்த சிறுத்தைப்புலி வனவர் திருமூர்த்தியை (35) தாக்கிவிட்டு குட்டியுடன் தப்பி சென்றது. இதில் அவருக்கு முதுகிலும், தலையிலும் லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து வனத்துறையினர் திருமூர்த்தியை மீட்டு தூனேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. 2 பேரை சிறுத்தைப்புலி தாக்கிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சிறுத்தைப்புலி தாக்கியதில் காயம் அடைந்த 2 பேரையும் ஊட்டி அரசு தலைமை ஆஸ்பத்திரிக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் வனத்துறையினர் கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

வனத்துறை ஊழியர் உள்பட 2 பேரை சிறுத்தைப்புலி தாக்கியது குறித்து மாவட்ட வனத்துறை அதிகாரி சுமேஷ் சோமனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர், சிறுத்தைப்புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க உத்தரவிட்டார். இதையடுத்து உதவி வன பாதுகாவலர் சரவணன் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள், சிறுத்தைப்புலி, குட்டியுடன் இருப்பதால் ஆக்ரோ‌ஷமாக உள்ளது. எனவே தேயிலை தோட்டத்தில் பச்சை தேயிலை பறிக்க யாரும் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தினர்.

இதற்கிடையே சிறுத்தைப்புலி தாக்கியதில் காயம் அடைந்த வேல்முருகனை மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் அவருக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு டாக்டர்களிடம் கேட்டுக்கொண்டார். இதைத்தொடர்ந்து சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினருக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டார். எனவே குட்டியுடன் சுற்றித்திரியும் சிறுத்தைப்புலியை பிடிக்க தேயிலை தோட்டத்தில் கூண்டு வைக்கப்பட்டு உள்ளது.

தேயிலை தோட்டத்தில் குட்டியுடன் சிறுத்தைப்புலி நடமாடி வருவதால் தேயிலை தோட்டத்தை ஒட்டி உள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.


Next Story