தனிமாநிலம் கோரி வடகர்நாடகத்தில் 2ம் தேதி முழுஅடைப்பு - போராட்டக்குழு அறிவிப்பு


தனிமாநிலம் கோரி வடகர்நாடகத்தில் 2ம் தேதி முழுஅடைப்பு - போராட்டக்குழு அறிவிப்பு
x
தினத்தந்தி 26 July 2018 3:19 AM IST (Updated: 26 July 2018 3:19 AM IST)
t-max-icont-min-icon

தனிமாநிலம் கோரி வடகர்நாடகத்தில் வருகிற 2ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று போராட்ட குழுவினர் அறிவித்துள்ளனர்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் 30 மாவட்டங்கள் உள்ளன. இதில் மராட்டியம்-கர்நாடகம் மற்றும் ஐதராபாத்-கர்நாடகம் எல்லைகளில் உள்ள 13 மாவட்டங்களை வடகர்நாடகம் என்று அழைக்கிறார்கள். இந்த நிலையில், எந்த கட்சி ஆட்சிக்கும் வந்தாலும் வடகர்நாடக மாவட்டங்கள் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

வளர்ச்சி பணிகள் சரிவர செய்யாததால் வடகர்நாடக மாவட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக மாநில அரசு மீது குற்றம் சுமர்த்தப்படுகிறது. இதனால் அடிக்கடி வடகர்நாடக மாவட்டங்களை தனிமாநிலமாக்க வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்து போராடி வருகிறார்கள்.

ஆனால் சமீபத்தில் முதல்-மந்திரி குமாரசாமி தாக்கல் செய்த பட்ஜெட்டில் வடகர்நாடக மாவட்டங்களுக்கு வளர்ச்சி திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. இது அந்த பகுதி மக்களை பெரும் கோபத்துக்குள்ளாக்கி உள்ளது. இதனால், மீண்டும் தனிமாநில கோரிக்கை எழத்தொடங்கி உள்ளது. ஏற்கனவே, தனிமாநில கோரிக்கைக்கு பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களான ஏ.எஸ்.பட்டீல் நடஹள்ளி, உமேஷ் கத்தி, ஸ்ரீராமுலு ஆகியோரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் வடகர்நாடக தனிமாநில போராட்டக்குழு தலைவர் சோமசேகர், தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

கர்நாடக அரசால் வடகர்நாடகம் நிரந்தரமாக நிராகரிக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள விவசாயிகள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். சமீபத்தில் முதல்-மந்திரி குமாரசாமி தாக்கல் செய்த பட்ஜெட்டில் வடகர்நாடகத்துக்கு எந்த திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை. பட்ஜெட்டில் வடகர்நாடகம் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டு உள்ளது.

இதனால் வடகர்நாடகத்தில் உள்ள 13 மாவட்டங்களை சேர்த்து தனிமாநிலமாக அறிவிக்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி 13 மாவட்டங்களுக்கும் சென்று அனைத்து அமைப்பினரின் ஆதரவும் பெறப்படும். இதைத்தொடர்ந்து அடுத்த மாதம்(ஆகஸ்டு) 2-ந் தேதி தனிமாநில கோரிக்கையை வலியுறுத்தி 13 மாவட்டங்களை உள்ளடக்கிய வடகர்நாடகத்தில் முழுஅடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது.

வடகர்நாடகத்தை தனிமாநிலமாக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்-மந்திரி குமாரசாமி கூறிய கருத்து மனவருத்தத்தை அளிக்கிறது. வடகர்நாடகத்தை வேண்டுமானால் தனிமாநிலமாக உருவாக்கி கொள்ளுங்கள். வளர்ச்சி பணிகளுக்கு எங்கிருந்து நிதி கிடைக்கும் என்று குமாரசாமி அலட்சியமாக பேசுகிறார். எனவே குமாரசாமியே, மத்திய அரசிடம் வடகர்நாடகத்தை தனிமாநிலமாக அறிவிக்க கோரிக்கை விடுத்து, தனிமாநில ஆய்வுக்காக தனிக்குழுவை அமைக்க வேண்டும்.

கலசா-பண்டூரி திட்டத்தை நிறைவேற்றுவதற்கான போராட்டத்தை நாங்களே செய்து கொள்கிறோம். முழு அடைப்பு போராட்டத்துக்கு பெலகாவி, தார்வார், தாவணகெரே, உத்தரகன்னடா, கொப்பல், பாகல்கோட்டை, விஜயாப்புரா, கலபுரகி, பீதர், பல்லாரி, கதக், ஹாவேரி, யாதகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள மடாதிபதிகள், கன்னட அமைப்பினர், விவசாய சங்கத்தினர் உள்பட அனைத்து அமைப்பினர்- சங்கத்தினர், மாணவ-மாணவிகள் அனைவரும் ஆதரவு தெரிவிக்க வேண்டும்.

வடகர்நாடகத்தை தனி மாநிலமாக உருவாக்குவதற்கு அனைத்து அம்சங்களும் உள்ளன. சுவர்ண சவுதா, ஐகோர்ட்டு கிளைகள் இங்கு உள்ளன. தனிமாநிலத்தை அறிவிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டும் உள்ளது. இதற்கு மாநில அரசு ஆதரவு அளித்தால் மட்டும் போதுமானது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி போராட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும். எங்களுக்கு அரசியல் கட்சியினர் ஆதரவு அளிக்க வேண்டும் என்று நாங்கள் கேட்கவில்லை. இருப்பினும் அரசியல்வாதிகள் ஆதரவு அளித்தால் அதை நாங்கள் ஏற்றுக்கொள்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த போராட்ட அறிவிப்பு கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story