பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு: கல்லூரி மாணவிகள் சாலை மறியல்


பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு: கல்லூரி மாணவிகள் சாலை மறியல்
x
தினத்தந்தி 26 July 2018 3:40 AM IST (Updated: 26 July 2018 3:40 AM IST)
t-max-icont-min-icon

பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக கல்லூரி மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கொடைக்கானல்,

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக கல்லூரி அட்டுவம்பட்டியில் உள்ளது. இங்கு படிக்கும் வெளியூரை சேர்ந்த மாணவிகள், ஆனந்தகிரி பகுதியில் உள்ள பல்கலைக்கழகத்துக்கு சொந்தமான விடுதியில் தங்கியிருந்து படித்து வருகின்றனர். இவர்கள், பல்கலைக்கழகத்துக்கு சொந்தமான பஸ்களில் கல்லூரிக்கு சென்று வருகின்றனர்.

இதற்காக மாணவி ஒருவருக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.300 பஸ் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்துள்ளது. இந்தநிலையில் டீசல் விலை உயர்வு, பராமரிப்பு, டிரைவர்களின் சம்பளம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு மாணவி ஒருவருக்கு மாத பஸ் கட்டணமாக ரூ.1,000 நிர்ணயம் செய்யப்பட்டதாக தெரிகிறது. இதற்கு கல்லூரி மாணவிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து உயர்த்தப்பட்ட கட்டணத்தை ரத்து செய்யக்கோரி, பல்கலைக்கழக கல்லூரி மாணவிகள் நேற்று காலை கொடைக்கானல்-வத்தலக்குண்டு சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறங்களிலும் நூற்றுக்கணக்கான வாகனங் கள் அணிவகுத்து நின்றன.

இதுகுறித்து தகவல் அறிந்த பல்கலைக்கழக பதிவாளர் சுகந்தி மற்றும் பேராசிரியைகள், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தையை ஏற்க மறுத்த மாணவிகள், தொடர் மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து இலகுரக வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. ஒரு மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்ட மாணவிகள் பின்னர் பல்கலைக்கழக வளாகத்துக்குள் சென்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து துணைவேந்தர் வள்ளி பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதையடுத்து மாலையில் மாணவிகள் கலைந்து சென்றனர். இருப்பினும் பஸ் கட்டண உயர்வை ரத்து செய்யும் வரை தங்களது போராட்டம் தொடரும் என மாணவிகள் தெரிவித்துள்ளனர். 

Next Story